சம்பள உயர்வு கிடையாது.. ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த HCL!
இந்த ஆண்டிற்கான முதல் காலாண்டு நிதி அறிக்கை எதிர்பார்த்ததை விட மோசமாக இருப்பதால், தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த பணியாளர்களுக்கு இந்த வருடத்தில் எந்தவிதமான சம்பள உயர்வும் கிடையாது என ஹெசிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ப்ரதீக் அகர்வால் அறிவித்துள்ளார்.
மேலும், ஜூனியர் மற்றும் நடுத்தர அளவில் உள்ள பணியாளர்களுக்கான மதிப்பீட்டுத் தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றும், ஆனால் அது அடுத்த காலாண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹெசிஎல் நிறுவனத்தின் தலைமை நிதிநிலை அதிகாரி கூறியுள்ளார்.
இந்த அறிவிப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்கள் நிறுவனம் நிர்ணயித்துள்ள இலக்குகளை அடைவதற்காக செலவுகளை குறைப்பதற்கான சில நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஜூன் மாதத்தோடு நிறைவடைந்துள்ள முதல் காலாண்டில், தொழில்நுட்பத்திற்கு போதுமான தொகையை ஒதுக்காததாலும் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
குறிப்பாக CNBC-TV18 செய்தி நிறுவனம், ரூ.3,809 கோடி அளவிற்கு நிகர லாபம் இருக்கும் என மதிப்பீடு செய்திருந்தது. கால வரிசைப்படி பார்த்தால், முந்தைய காலாண்டில் எச்.சி.எல் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 3,983 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலாண்டின் நிகர லாபத்தை கணக்கிட்டு பார்க்கும் போது அதைவிட 11 சதவிகிதம் குறைவாக இருக்கிறது.
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் வருவாய் ரூ.26,296 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 12% அதிகமாகும். இந்த காலாண்டில் மட்டும் 2500 பணியாளர்கள் எச்.சி.எல் நிறுவனத்திலிருந்து வெளியேறி உள்ளார்கள். தற்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 223,438 ஆக உள்ளது.
இந்த காலாண்டில் புதிதாக 1,597 நபர்கள் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த காலாண்டில் நிறுவனத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை 16.3 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக இது 20 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கிறது.
காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.சி.எல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலான்மை இயக்குனரான விஜயகுமார், “ஆமாம், பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மை தான். ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் காலியிடங்களுக்கு நாங்கள் புதிதாக ஆட்கள் யாரையும் நியமிக்கவில்லை” என்றார்.
இருப்பினும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில் மட்டும் கூடுதலாக 3,674 பணியாளர்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இதே காலாண்டில் 4,480 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியது எச்.சி.எல் நிறுவனம்.