13.50 கோடி இந்தியர்கள் வறுமையிலிருந்து விடுவிப்பு…!
கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்தியா வளர்ந்து வரும் நாடு என்றாலும் கூட, இந்தியாவில் வறுமை இன்னும் பெரிய சவாலாகவே உள்ளது. ஒரு வேலை உணவு கூட இன்றி மக்கள் தவிக்கும் அவல நிலையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் 13.50 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
தேசிய பல பரிமாண வறுமை குறியீடு- ஆய்வு முன்னேற்றம் 2023 என்ற அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்விற்கான காலம் 2015-16 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டு காலமாகும். சுகாதாரம், கல்வி, வாழ்க்கை தரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 24.95 சதவீதமாக இருந்த வறுமை 14.96 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 2015- 2021க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 9.98 சதவீதம் வறுமை குறைந்துள்ளது. அதன்படி நாட்டில் வாழும் ஏழைகளின் எண்ணிக்கை 13 கோடியே 50 லட்சம் குறைந்துள்ளது.
இதே போல கிராமப்புற பகுதிகளில் வறுமையின் சதவீதம் மிக வேகமாக குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி கிராமப்புற பகுதிகளில் 32.59 சதவீதமாக இருந்த வறுமை சரசரவென குறைந்து 19.29 சதவீதமாக உள்ளது.
இதில் 36 மாநிலங்கள், 707 மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்நிலையில் மாநிலங்களை பொறுத்த வரையில் உத்திரபிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வறுமை வேகமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.