பாசன முறை முகாமைத்துவம் மீதான அமைச்சரின் திட்டம் மீது விவசாயிகள் பெரும் எதிர்பார்ப்பு.
இம் மாவட்டத்துக்கான நெற்செய்கையை விரிவுபடுத்தவென பாசன முறையில் சீரான நீர் முகாமைத்துவத்துவம் மீது கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தி இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் தெரிவித்தார்.
கண்டாவளை புளியம் பொக்கணை கமநல சேவை நிலையத்தில் கமக்காரர் அமைப்புகளை சந்திக்கவென இன்று (18) ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் கிளிநொச்சி மாவட்டங்களுக்காக ஒருங்கிணைப்பு குழுவின் தலைமைத்துவத்தை கௌரவ அமைச்சர் பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் விவசாயிகள் மத்தியில் அடையப்பெற்ற முன்னேற்றங்களை கவனத்தில் எடுத்து உரையாற்றிய இணைப்பாளர் மேலும் தனது உரையில்,
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சராக கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முதன்முறையாக இம்மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைமைத்துவத்தை இன்று பொறுப்பேற்றிருப்பது அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.
காணியற்றவர்களுக்காக மத்தியில் காணி அமைச்சுடன் நடாத்திய பேச்சுக்களை அடுத்து புதிய அமைச்சரவை பத்திரத்தின் மூலம் இம் மாவட்டத்தில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்கும் கௌரவ அமைச்சர் அவர்களின் முயற்சிகள் வெற்றியளித்துள்ளன.
நெல் உத்தரவாத விலைக்கான செய்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து விவசாய அமைச்சு மற்றும் நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் நடாத்திய பேச்சுக்களில் நெல்லின் விலைக்கான உத்தரவாதத்தை கௌரவ அமைச்சர் எமது விவசாயிகளுக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.
அக்கரையான் பகுதி 200 ஏக்கர் கரும்புத்தோட்ட நெற் செய்கை பயனாளிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடாக புதிய கமக்காரர் அமைப்பை பதிவுசெய்யும் பணிகள் இன்று பூர்த்தி அடைந்திருப்பதுடன் பொருத்தமான சரியான பயனாளிகளை தெரிவு செய்வதற்கானபணிகள் மீதும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார்.
பிந்தியதாக நீர்ப்பாசனத் தின் போது கூடுதலாக வெளியேறும் கழிவு நீரை சீராக முகாமை செய்வதன் மூலம் இந்நீரைக்கொண்டு கூடுதல் நிலத்தில் செய்கையை விரிவுபடுத்த அவர் மேற்கொண்டுள்ள முயற்சிகளும் விவசாயிகள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் கண்டாவளை ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதியாக கமல் மற்றும் உத்தியோகத்தர் பிரமிளன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.