மருத்துவமனையில் பற்றிய தீ: 5 நிமிடங்களில் காப்பாற்றப்பட்ட 47 குழந்தைகள்
ராஜஸ்தான் மாநிலத்தின் மிகப்பெரிய அரசு குழந்தைகள் மருத்துவமனையில் பற்றிய தீயிலிருந்து வெறும் 5 நிமிடங்களில் 47 குழந்தைகள் காப்பற்றப்பட்டுள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லோன் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நேரிட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குளிர்சாதனப் பெட்டியிலிருந்து தீ பரவி, அறை முழுவதும் புகை சூழ்ந்துகொண்டது. அங்கிருந்த பெற்றோர் உடனடியாக குழந்தைகளை வெளியேற்ற மருத்துவமனை ஊழியர்களுடன் இணைந்துகொண்டனர்.
ஜன்னல் கண்ணாடிகள் உடனடியாக உடைக்கப்பட்டு, புகை வெளியேற வழி செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, தீ விபத்து பரவாமல் தடுக்கப்பட்டது. அவரவர் தங்களது கைகளில் இருந்த செல்லிடப்பேசிகளின் டார்ச்க்ளை ஒளிர விட்டு, குழந்தைகளை பத்திரமாக வெளியேற்ற உதவினர்.
100 படுக்கை வசதிகள் கொண்ட இரண்டு தீவிர சிகிச்சைப் பிரிவு அறைகளில் இருந்து பெற்றோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் முயற்சியால் 47 குழந்தைகள் வெறும் 5 முதல் 7 நிமிடங்களில் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அது மட்டுமல்லாமல், மருத்துவமனையிலிருந்த தீயணைப்புக் கருவிகளை மருத்துவமனை ஊழியர்கள் பயன்படுத்தி, தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பே தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உரிய நேரத்தில் அனைவரும் துரிதமாக செயல்பட்டதால் 47 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், தீ பரவுவதற்குள், புகை மண்டலத்தால் பலரும் பாதிக்கப்ப்டடிருப்போம் என்று தீ விபத்திலிருந்து தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.