பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் இலங்கை வருகை….
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆசிய கிரிக்கெட் கெளன்சில் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை (20) இலங்கையை வந்தடைந்ததோடு ஆசிய கிரிக்கெட் கெளன்சில் அதிகாரிகள் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கிண்ண தொடரை ஒட்டி ஏற்கனவே இலங்கை வந்துள்ளனர்.
இதன்படி இந்த அதிகாரிகள் ஆசிய கிண்ண போட்டிகள் நடைபெறவுள்ள கண்டியில் உள்ள பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கு மற்றும் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தை மேற்பார்வை செய்துள்ளனர்.
தொடர்ந்து இந்த தொடரை நடத்துவது தொடர்பில் பாக். கிரிக்கெட் சபை மற்றும் ஆசிய கிரிக்கெட் கெளன்சில் அதிகாரிகள் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவுள்ளனர்.
ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு ஒரு நாளைக்கு பின்னரே இந்த அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர்.
50 ஓவர் வடிவத்தில் நடைபெறும் ஆசிய கிண்ண தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றிருந்தபோதும் இந்தத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் கலப்பு முறையில் நடத்தப்படவுள்ளது. இதன்படி தொடரின் நான்கு போட்டிகளில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதோடு இறுதிப் போட்டி உட்பட ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் ஆசிய கிண்ண தொடர் செப்டெம்பர் 17 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.