வெப்ப நிலைக்கு தாக்குப் பிடிக்குமா மனித இனம்? – சண் தவராஜா
புவியின் வெப்பநிலை அண்மைக் காலமாக அதிகரித்துச் செல்வது தொடர்பான செய்திகளையும் ஆய்வுகளையும் அடிக்கடி ஊடகங்களில் பார்க்க முடிகின்றது.
இவ்வாறு உலகின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்வதால் ஏற்படக் கூடிய பாரதூரமான விளைவுகள், பாதிப்புகள் என்பவை தொடர்பான எச்சரிக்கைகளையும் அவற்றிலே அவதானிக்க முடிகின்றது. ஒரு சாமானிய மனிதனாக இந்தச் செய்திகள் எமக்குக் கவலை தருவதாக உள்ள போதிலும் இந்த நிலையை மாற்ற எம்மால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையிலேயே நாம் இருக்கிறோம் என்ற யதார்த்தம் நெஞ்சைப் பிசைகிறது.
புவி வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான கரியமில வாயு அதிகளவில் வளி மண்டலத்தில் கலப்பதற்குப் பங்களிக்கும் வல்லரசு நாடுகள் பெருமெடுப்பில் மாநாடுகளையும் கூட்டங்களையும் நடத்தி இதனைப் பற்றிப் பேசிவிட்டுக் கலைந்து செல்கின்றன. ஆக்கபூர்வமான எந்தவொரு செயற்பாடும் உலகில் இல்லாத நிலையில் புவியின் வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்த வருடத்தின் இறுதியில் கூட துபாயில் காலநிலை தொடர்பிலான உலகளாவிய மாநாடு நடைபெற இருக்கிறது. காலநிலைக்கு அதிகம் பாதிப்பை விளைவிக்கும் பெற்றோலியப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நாட்டில் காலநிலை பாதிப்பைப் பற்றி ஆராயும் ஒரு மாநாட்டை நடத்துவது எவ்வகையில் உசிதமானது என்கின்ற கேள்விகள் உலகின் பல பகுதிகளிலும் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மாநாட்டை நடத்தும் நாடோ அன்றி மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளோ உண்மையில் காலநிலையைக் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிந்தை உள்ளனவா என்ற கேள்வி எழுவது இயல்பானதே.
புவியின் வெப்பநிலையை அளவிடும் உலகளாவிய நடைமுறை 1979ஆம் ஆண்டிலேயே அறிமுகமாகியது. அதன் பின்னான காலப்பகுதியில் 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகின் அதிகூடிய வெப்பநிலை நிலவிய காலமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் புவியின் சராசரி வெப்பநிலை 16.92 பாகை செல்சியசாக இருந்தது. அதன் பின்னர் நடப்பாண்டின் யூலை மாதம் உலகின் அதிகூடிய வெப்பநிலை நிலவிய மாதமாக மாறியுள்ளது. இந்த மாதம் முழுமைக்குமே இத்தகைய வெப்பநிலை நீடிக்கும் என்கின்ற அறிவிப்பு வேறு பீதியைக் கிளப்புகிறது.
முன்னர் வெளியான தகவலின் பிரகாரம் யூலை 3ஆம் திகதி நிலவிய வெப்பநிலை 17.1 பாகை செல்சியசாக இருந்தது. இது 2016இல் பதிவான சாதனையை முறியடித்தது. அந்தச் செய்தி தந்த அதிர்ச்சி மறைவதற்கிடையில் யூலை 6ஆம் திகதி வெப்பநிலை 17.23 பாகையாக உயர்ந்து 3 நாட்களுக்கு முந்திய சாதனையை முறியடித்தது. அன்றுமுதல் இந்தக் கட்டுரை எழுதப்படும் நாள்வரை புவியின் சராசரி வெப்பநிலை 16.94 பாகைக்குக் கீழ் இறங்கவே இல்லை. திடீரென யூலை 17ஆம் திகதி வெப்பநிலை உயர்ந்து 17.11 பாகையை எட்டிப் பிடித்தது. இந்நிலையில் புவியின் அதி கூடிய சராசரி வெப்பநிலை நிலவும் மாதமாக இந்த வருடத்தின் யூலை மாதமே விளங்கக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் அதிகரித்த வெப்பநிலை குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவற்றை அதிகம் பாதிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவைப் பொறுத்தவரை இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகள் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளன.
இத்தாலியத் தலைநகர் ரோமில் யூலை 18ஆம் திகதிய வெப்பநிலை 41.8 பாகை செல்சியசாகப் பதிவாகி இருந்தது. இதுவே அந்த நகரின் இதுவரை பதிவான அதிக வெப்பநிலையாக உள்ளது. கடந்த வருடத்தில் இதே மாதத்தில் இதனை விட ஒரு பாகை குறைவான வெப்பநிலையே அதிகூடிய வெப்பநிலையாகப் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புவியின் வெப்பநிலை அதிகரிப்பு என்பது வெறுமனே கொழுத்தும் வெயில், அளவுக்கு அதிகமான மழைவீழ்ச்சி, காட்டுத் தீ என இயற்கை அநர்த்தங்களோடு மாத்திரம் முடிந்து போகின்ற விடயமல்ல. அது மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித உயிர் இழப்புக்களை ஏற்படுத்தும் அதேவேளை, உலக ஒழுங்கை மாற்றுவதுடன் பொருளாதாரத்திலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஐரோப்பியக் கண்டத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் அதிகரித்த வெப்பநிலையோடு தொடர்புபட்ட காரணங்களால் 62,000 பேர் வரையானோர் மரணத்தைத் தழுவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை அங்கே ஆண்டுதோறும் 700 வரையானோர் மரணத்தைத் தழுவுவதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. எனினும், இதே காரணங்களால் அமெரிக்காவில் பல மடங்கு மக்கள் ஆண்டுதோறும் இறப்பதாக சுயாதீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆதாரமாக அங்கு மரணங்கள் தொடர்பான பதிவுகளில் உள்ள தவறுகளை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க இந்தப் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ உயிர்களுக்கும் சூழலுக்கும் பாரிய அச்சுறுத்தலாக உள்ளது. கனடா, அமெரிக்கா, கிரேக்கம், சீனா, யோர்தான் எனக் காட்டுத் தீ பல்லாயிரக் கணக்கான ஹெக்ரயர் காடுகளை எரித்துக் கொண்டிருக்கின்றது. இந்தக் காட்டுத் தீக்களை அணைக்க வழி தெரியாது அந்தந்த நாடுகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
யூலை 17ஆம் திகதிய தகவல்களின் படி அன்றைய நாளில் மாத்திரம் கனடாவில் 900 இடங்களில் பெருமளவிலான காட்டுத் தீ பரவியதாகவும் அவற்றுள் 599 இடங்களில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தத் தீப் பரவலில் 26 மில்லியன் ஏக்கர் காடுகள் அழிந்து நாசமாகி உள்ளதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதைப் போன்று உலகின் பல பாகங்களிலும் அதிகரித்த வெப்பநிலை, மோசமான மழைவீழ்ச்சி, புயல், வெள்ளம் எனச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்ன காரணத்தால் உருவாகின்றன என்ற அறிவியல் பூர்வமான தகவல்கள் ஒன்றும் இரகசியமானவை அல்ல. கைத்தொழில் புரட்சி என மனித இனத்தால் கொண்டாடப்படும் நவீன கண்டுபிடிப்புகள், அதன் விளைவான உற்பத்திகள், தொழில் வளர்ச்சி என்பவற்றின் பக்க விளைவுகளே மனித குலத்தை அச்சுறுத்தும் இன்றைய நிலைக்குக் காரணமாக உள்ளது. தொழில் வளர்ச்சி, உற்பத்தி போன்றவை மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், எமது வாழிடத்தைப் பணயம் வைத்து இவற்றை அடைய வேண்டுமா என்பதே கேள்வி.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது, பசுமைப் புரட்சி, காடு வளர்ப்பு எனப் பல திட்டங்கள் முன்மொழியப்பட்டாலும் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப் படுகின்றனவா என்பதில் சந்தேகம் நீடிக்கவே செய்கிறது. ஏனெனில் முதலாளித்துவ அரசாங்கங்கள் மக்கள் நலன் சார்ந்தவையாக இல்லாமல் பெரு முதலாளிகள் மென்மேலும் சொத்துச் சேர்ப்பதற்கு உதவும் நோக்கிலேயே செயற்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. சூழல் பாதுகாப்பு தொடர்பிலான தொண்டு நிறுவனங்களும், ஆர்வலர்களும் தமது சக்திக்கு உட்பட்ட வகையில் என்னதான் முயற்சி செய்தாலும் பெரு நிறுவனங்களின் பொருளாதார வளத்துக்கும், ஆட் பலத்துக்கும் முன்னால் நின்றுபிடிக்க முடியாத நிலையே உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளாதவரை மனித குலத்துக்கு எதிரான அச்சுறுத்தல் தொடரவே செய்யும்.
தமது பிள்ளைகளுக்கு ஒரு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே சிறந்த பெற்றோரின் கடமை. அதேபோல் எமது எதிர்காலச் சந்ததிக்காக ஒரு சிறந்த உலகை விட்டுச் சொல்வதும் எம் ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது. போகிற போக்கைப் பார்த்தால் எமது வாழ்நாளிலேயே உலகம் அழிந்துவிடுமோ என்ற அச்சமே ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.