மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை… பாதுகாப்புப் படையினரின் 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு!
மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய இரண்டு பேருந்துகளை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததாகவும், இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாத தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன்பிறகு நீடித்து வரும் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்தச் சூழலில், காங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே 4-ஆம் தேதி இரண்டு பழங்குடியினப் பெண்கள், மற்றொரு தரப்பு ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ கடந்த புதன்கிழமை வெளியானது.
பி.பைனோம் கிராமத்தில் நிகழ்ந்த இக்கொடூரம், நாட்டையே அதிா்ச்சிக்குள்ளாக்கியது.
மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், இந்திய ராணுவம் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை(பிஎஸ்எஃப்) ஆகிய துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தி வரும் இரண்டு பேருந்துகள் திமாபூரில் இருந்து சபோர்மேனா நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, சபோர்மேனாவில் பேருந்தை மறித்த ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததாகவும், இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.