நாட்டை கொள்ளையடிக்கவே I.N.D.I.A என பெயர் வைத்துள்ளார்கள்.. பிரதமர் மோடி
ராஜஸ்தானில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, இந்தியா கூட்டணி மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு இலக்கும் இல்லை என கூறினார். மேலும் மோசடி நிறுவனங்களை போல அக்கூட்டணி பெயரை மாற்றியுள்ளதாக விமர்சித்தார். இந்தியா என்ற பெயர், அவர்களின் தேச பக்தியை காட்டுவதற்கு இல்லை என்றும், மாறாக, நாட்டை கொள்ளை அடிப்பதற்கு தான் என்றும் மோடி கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது செய்த தவறுகளை மறைக்க, கூட்டணியின் பெயரை இந்தியா என மாற்றிக்கொண்டதாகவும் மோடி கடுமையாக சாடினார். இந்திரா தான் இந்தியா, இந்தியா தான் இந்திரா என்ற முழுக்கத்தை காங்கிரஸ் கட்சி முன்நிறுத்தியபோது மக்கள் அவர்களை நிராகரித்தனர் என்றும் அதேப்போல் தற்போதும் நடக்கும் என்றும் மோடி தெரிவித்தார்.
ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள அமைச்சர் ஒருவர் கூறும் சிவப்பு டைரியில் காங்கிரஸ் கட்சியின் ஊழல் குறித்த தகவல்களை இருப்பதாக தெரிவித்தார். சிவப்பு டைரியாலேயே காங்கிரஸ் ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கும் என்றும் பிரதமர் கூறினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சிவப்பு டைரி ஒரு கற்பனை கதாபாத்திரம் என கூறினார்.
முன்னதாக, பிரதமரின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அசோக் கெலாட் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பேசுவதற்காக ஒதுக்கிய 3 நிமிடங்களை பிரதமர் அலுவலகம், நிகழ்ச்சி நிரலில் சேர்க்கவில்லை என கூறப்படுறது. இதனால் முதலமைச்சர் அசோக் கெலாட் பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார், மேலும் பிரதமரை ட்விட்டரில் தான் வரவேற்க முடியும் என பதிவிட்டிருந்தார். ஆனால், கெலாட்டின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரதமர் அலுவலகம், கெலாட்டிற்கு உடல் நிலை சரியில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டதால் தான், அவரது பேச்சுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளது.