‘டிடி ரிட்டர்ன்ஸ்’ விமர்சனம்.
சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம், குளு குளு படங்கள் மூலம் தொடர்ந்து சறுக்கல்களைச் சந்தித்த சந்தானம் அதைச் சரிகட்டும் விதமாகத் தற்பொழுது டிடி ரிட்டன்ஸ் படம் மூலம் களத்தில் குதித்துள்ளார். சிரிப்புக்குப் பஞ்சம் இல்லாத இந்தப் படம் சந்தானத்துக்கு கம்பேக் படமாக அமைந்ததா, இல்லையா?
பாண்டிச்சேரியில் சாராயக் கடைகள் மூலம் மிகப்பெரும் தொழிலதிபராக இருக்கும் பெப்சி விஜயனின் பணத்தைத் திருடன் பிபின் கும்பல் கொள்ளையடித்து விடுகிறது. இவர்களிடம் இருந்து மொட்டை ராஜேந்திரனின் திருட்டுக் கும்பல் அந்தப் பணத்தைக் கொள்ளையடித்து விடுகிறது.
பிறகு இவர்களிடம் இருக்கும் பணம் சந்தானம் டீமிடம் கைமாறுகிறது. சந்தானம் டீம் அந்தப் பணத்தை ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் காட்டுப் பேய் பங்களாவுக்குள் ஒளித்து வைத்து விடுகிறார்கள். இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்ட பெப்சி விஜயன் சந்தானத்தின் காதலியைப் பனையக் கைதியாகப் பிடித்துக் கொண்டு இவர்களிடம் தன் பணத்தை திரும்பக் கேட்டு மிரட்டுகிறார்.
அந்த பணத்தை திரும்பக் கொண்டு வர சந்தானம் டீம், திருடன் பிபின் டீம் மற்றும் மொட்டை ராஜேந்திரன் டீம் ஆகியோர் அந்தப் பங்களாவிற்குள் செல்கின்றனர். போன இடத்தில் பங்களாவிற்குள் இருக்கும் பேய் இவர்களை வைத்து ஒரு கேம் விளையாடுகிறது.
அந்த கேமில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கே அந்தப் பணம் எனக்கூறி விடுகிறது. இதையடுத்து அந்த கேமில் யார் வெற்றி பெற்றார்கள்? சந்தானம் தன் காதலி சுரபியை மீட்டாரா, இல்லையா? என்பதே டிடி ரிட்டன்ஸ் படத்தின் மீதிக் கதை.
தொடர் தோல்விகளில் துவண்டு போயிருந்த சந்தானத்தை மீண்டும் கம்பேக் கொடுக்கச் செய்து பழைய பாதைக்குத் திரும்ப வெற்றிகரமாகக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநரும், சந்தானத்தின் நண்பருமான பிரேம் ஆனந்த். சந்தானம் படம் என்றாலே ரசிகர்கள் என்ன எதிர்பார்த்து திரையரங்குக்குள் வருவார்களோ அதைச் சரியாகக் கணித்து அதற்கேற்றார் போல் சிரிப்பு சரவெடி பேய்க் காமெடி படத்தைக் கொடுத்து வெற்றி பெற்று, படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் பிரேம் ஆனந்த். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் ஒரு சீராகச் சென்று சிரிப்பு சரவெடிகளோடு அமர்க்களமாய் முடிந்திருக்கிறது.
முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் சற்றே லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை நல்ல காமெடிகளால் மறக்கடிக்கப்பட்டு படத்துடன் நம்மை ஒன்ற வைத்துள்ளன. இவையே படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து படத்தைக் காப்பாற்றி இருக்கிறது. குறிப்பாக சந்தானம் நாயகனாக நடிக்கும் படங்களில் எப்போதும் சற்று அடக்கியே வாசிப்பார்.
அந்த வகையில் இந்தப் படத்தில், அதே போல் அடக்கியே அவர் வாசித்து இருந்தாலும் உடன் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது பங்களிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்துக் காமெடி திருவிழாவையே அரங்கேற்றி உள்ளனர். இவை அனைத்தும் நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய காமெடிகளாகவே இருந்தாலும், தற்போதும் அவை சிரிப்பு வர வைக்கும்படி அமைந்து ரசிக்க வைத்துள்ளது.
நாயகன் சந்தானம் தனக்கு என்ன வருமோ அதையே இப்படத்தில் சிறப்பாக செய்து தன் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். இவரது கதைத் தேர்வும், ஸ்கிரீன் பிரசன்ஸ் உள்ளிட்டவை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வரும் சுரபி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் பெப்சி விஜயன் வழக்கமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார். இவர்களைத் தவிர படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கின்றார்கள்.
சந்தானம் படத்தின் ஆஸ்தான நடிகர்கள் அனைவரும் இப்படத்திலும் இருக்கிறார்கள். ஒவ்வொருவராகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதபடிக்கு, நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் பங்களிப்பை மிகச் சிறப்பாகச் செய்து காமெடி காட்சிகளில் பின்னிப் பெடல் எடுத்து இருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவரவருக்கான காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்து இப்படத்தைக் காப்பாற்றித் தூண் போல் நின்று காத்திருக்கின்றனர்.
இவர்களுடன் பேயாக நடித்திருக்கும் நடிகர்களும் அவரவர்களது வேலையை மிக நிறைவாகச் செய்து கைத்தட்டல் பெற்று இருக்கின்றனர். குறிப்பாக பங்களாவிற்குள் நடக்கும் கேம் ஷோவும், பணம் திருடு போய்க் கைமாறும் காட்சிகளும் படத்தின் டிரேட் மார்க் காட்சிகள்.
பேய் பங்களாவுக்குள் இருக்கும் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும், கேம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் மிகச்சிறப்பாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீப்குமார். வழக்கமான பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கூட நேர்த்தியாகப் படம் பிடித்து புதிய கோணத்தில் கொடுத்திருக்கிறார். ஆப்ரோ இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை பெரும்பாலும் எந்த இடங்களிலும் தொய்வில்லாமல், அயற்சி இல்லாமல் ஒரே சீராகச் சென்று ஒரு நல்ல காமெடியான பேய்ப் படம் பார்த்த அனுபவத்தை இந்த டிடி ரிட்டன்ஸ் கொடுத்து இருக்கிறது. இரண்டாம் பாதி பங்களாவிற்குள் நடக்கும் கேம் காட்சிகளின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருக்கலாம்.