மணிக்கணக்கில் காத்திருந்த அமலாக்கத்துறை! செந்தில் பாலாஜியிடம் விடிய விடிய விசாரணை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நேற்று இரவு அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் 14ம் திகதி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரணையை முடித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று காலை தீர்ப்பு வழங்கினர்.
அப்போது, இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை இல்லை எனவும், செந்தில் பாலாஜியை கைது செய்த பின்பு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை 5 நாள்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது.
இதனையடுத்து உத்தரவு நகலை பெற்றுக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் சிறைக்கு நேற்று மாலை 6 மணியளவில் காரில் சென்றனர்.
இதில், செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க, மேலும் ஒரு காரில் மத்திய காவல் படையினர் வந்தனர்.
பின்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவு நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவு நகல் இ- மெயில் மூலம் தங்களுக்கு இன்னும் வரவில்லை என சிறை அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் தெரிவித்தனர். இதனால், அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 6 மணியில் இருந்து சிறையில் காத்திருந்தனர்.
பின்பு, இரவு 8.30 மணியளவில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை, பொலிஸ் பாதுகாப்புடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனையடுத்து, செந்தில் பாலாஜி இரவு 9.10 மணிக்கு சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு, 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடைபெற்றது.
செந்தில் பாலாஜி தொடர்பாக கைப்பற்ற ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 50 கேள்விகளை தயார் செய்து வைத்திருந்தனர். ஒரு நாளைக்கு 50 கேள்விகள் வீதம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்து, அவரது பதிலை பதிவு செய்ய முடிவு செய்தனர்.
மேலும், விசாரணையின் போது, செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனை அழைத்துச் செல்ல ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.