மருத்துவமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழப்பு.. அதிர்ச்சி சம்பவம்
மகாராஷ்டிரா மருத்துவமனை ஒன்றில், ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள கள்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்ததாகவும், மேலும் இங்கு நோயாளிகளுக்கு போதுமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும், தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஜித்தேந்திரா அவாத் குற்றம்சாட்டினார், இந்த குற்றச்சாட்டினை மருத்துவமனை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அதே மருத்துவமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் சிலர் முதியவர்கள் எனவும் மற்றும் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து பேசிய தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறுகையில், ‘சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளிகளில் 10 பேர் பெண்கள் 8 பேர் ஆண்கள். இந்த உயிரிழப்புகள் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை கமிஷனர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த நோயாளிகளின் குடும்பத்தினர் உரிய சிகிச்சை அளிக்கப்படாததே உயிழப்பிற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.