லயன் வீடுகளிலிருந்து 300 பேரை வெளியேற்ற தோட்ட நிர்வாகம் முடிவு : லயன் தோட்டத்தை துப்பரவு செய்ததற்காக 6 பேர் மீது வழக்கு
குருநாகல் – இப்பாகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பத்தலகொட தேயிலைத் தோட்டத்திலிருந்து 300 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இந்த மக்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 4 அல்லது 5 தலைமுறைகளாக இந்த பகுதியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
தாம் இனி லயன் அறைகளில் வாழ முடியாது எனவும் காணி உரிமையை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், லயன் வீடுகள் அமைந்துள்ள தோட்டத்தை சுத்தம் செய்ததாக ஆறு பேருக்கு எதிராக தோட்ட நிர்வாகம் வழக்குப்பதிவு செய்திருந்தது.
இவ்வாறான பின்னணியில்தான் மூன்று நாட்களுக்குள் தோட்டத்தை காலி செய்யுமாறு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுமாறு தோட்ட நிர்வாகம் தமக்கு அறிவித்துள்ளதாகவும், அவ்வாறு செயற்பட முடியாத பட்சத்தில் தோட்டத்தை விட்டு வெளியேற முடியும் எனவும் தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவர்களை சந்திப்பதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குழுவொன்று சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ரம்பொட பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.