ஜனாதிபதி பதவியைச் சஜித் ஏன் ஏற்கவில்லை? – அவரே பகிரங்க விளக்கம்.
ஜனாதிபதி பதவியைத் தான் ஏற்காதமைக்கான காரணத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பகிரங்கமாகத் தெரிவித்தார்.
விழுமியமிக்க சமூகத்துக்கான பிக்குகள் ஆலோசனை பேரவையின் இரண்டாம் கட்டம் நேற்று (15) காலி மாவட்டத்தை இலக்காகக் கொண்டு காலி நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாஸ தனது விளக்கத்தை வழங்கினார்.
“நான் ஏன் ஜனாதிபதி பதவியை ஏற்கவில்லை எனப் பலரும் விமர்சிக்கின்றனர். திருடர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அச்சத்தாலும், வெட்கத்தாலும்தான் ஜனாதிபதி பதவியை நான் ஏற்கவில்லை. புதிய ஆணையின்றி நாட்டின் பொறுப்பை ஏற்க மாட்டேன். மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளை மதித்து கொள்கைசார் தூய்மையான பயணத்தை மேற்கொள்ள நான் தயார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவை தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்ல என்றும், நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய நிகழ்ச்சி நிரலே தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.