பெலாரசினை சண்டைக்கு இழுத்தால் அணுவாயுதங்களை பயன்படுத்துவோம். பெலாரஸ் எச்சரிக்கை.
பெலாரசினை வலுச்சண்டைக்கு இழுத்தால் அந்த நாடு ரஸ்யா வழங்கிய அணுவாயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ மீண்டும் தெரிவித்துள்ளார்.
பெலாரசிற்கும் அதன் எல்லையில் உள்ள நேட்டோ நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே பெலாரஸ் ஜனாதிபதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உக்ரைன் தனது எல்லைகளை கடந்தால் தவிர உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் பெலாரஸ் ஒருபோதும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாங்கள் ரஸ்யாவிற்கு உதவுகின்றோம் அவர்கள் எங்கள் சகாக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெலாரஸின் எல்லையிலுள்ள நேட்டோநாடுகள் தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பெலாரஸ் எங்களிடம் உள்ள அணுவாயுதங்கள் உட்பட அனைத்தையும் பயன்படுத்தி பதிலடி கொடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றால் நாங்கள் பொறுமையாகயிருக்கப்போவதில்லை,காத்திருக்கப்போவதில்லை- ஓய்வில் இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள பெலாரஸ் ஜனாதிபதி எங்கள் மீதான தாக்குதலை தடுப்பதற்காக எங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எவரையும் அச்சுறுத்துவதற்காக அணுவாயுதங்களை ரஸ்யாவிலிருந்து கொண்டுவரவில்லை,அணுவாயுதங்கள் வலுவான தற்பாதுகாப்பாக விளங்குகின்றன இவை மூலோபாய அணுவாயுதங்கள் இல்லை அதன் காரணமாக நாங்கள் அவற்றை உடனடியாக பயன்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் ரஸ்யா பெலாரசிற்கு அணுவாயுதங்களை வழங்கியிருந்தது என புட்டின் தெரிவித்திருந்தார்.