அரசுக்கு ஆதரவளிக்க தயார்: நாட்டு மக்களுக்கு சஜித் உரை (வீடியோ)
அரசாங்கம் அரசியல் விளையாட்டை கைவிட்டு தேசத்தின் முன்னேற்றத்திற்காக நேர்மையாக செயற்பட்டால் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நல்லிணக்கத்துடன் பேசினால் கட்சி என்ற ரீதியில் எமது நிபுணத்துவத்தையும் ஆதரவையும் அரசாங்கத்திற்கு வழங்க தயாராக உள்ளோம் எனவும் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
நாடு தற்போது நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், நீண்ட வரட்சியை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த அவர், சுமார் ஐயாயிரம் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், வைத்தியர்களும் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாட்டிற்கு விரிவான தேசியத் திட்டம் தேவை என்றும், புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் தேவை என்றும், கடலில் கலக்கும் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அரசியல் விளையாட்டுக்களை தவிர்த்து நாட்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த அவர், அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டால் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.