கிராம மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட பணம்…காரணம் என்ன?
தெலங்கானாவில் ஒரு குறிபிட்ட கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் வரை பணம் செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாத கடைசி ஆனாலே நாம் அனைவரும் எதிர்பார்ப்பது சம்பளத்தை தான். கையில் செல்போனை வைத்துக்கொண்டு வங்கியின் குறுஞ்செய்திக்காக காத்திருப்போம். சம்பளம் கிரெடிட் ஆவதற்கு சற்று தாமதமானால் கூட என்னவோ ஏதோ என்று நினைப்போம். ஆனால் நாம் எதிர்பாராத நேரத்தில் நம் வங்கி கணக்கில் யாராவது பணம் செலுத்தினால் எப்படி இருக்கும்?.
தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள எட்டூர்நகரம் கிராமத்தில் தான் இந்த சுவாரஸ்ய சம்பவம் நடத்துள்ளது. இந்த ஊரின் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரே வங்கியில் இருந்து செலுத்தப்பட்ட பணம் அல்ல, வெவ்வேறு வங்கியில் இருந்து செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரைக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரைக்கும் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்பாராத நேரத்தில் வங்கியில் பணம் செலுத்தப்பட்ட நிலையில் கிராம மக்கள் சந்தோசத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். பணம் வங்கி கணக்கில் வந்ததும் சிலர் எடிஎம்-ல் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டனர். இன்னும் சிலர் தங்கள் மனைவி அல்லது குழந்தைகளின் வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றம் செய்துள்ளனர்.
இது குறித்த தகவல்கள் தீயாக பரவிய நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். எட்டூர்நகரம் பகுதிக்கு சென்ற காவல்துறையினர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டவர்களிடம் யார் யாருக்கு எவ்வளவு பணம் செலுத்தப்பட்டது என்ற விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பணம் அனைத்தும் ஏதோ ஒரு நிறுவனத்தின் பணம் என்பது தெரியவந்துள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் செலுத்த வேண்டிய பணம் தவறுதலாக இந்த கிராம மக்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களுக்கு பணம் கொடுக்க அரசியல் கட்சிகள் தீட்டிய திட்டமாக இருக்கலாம் மற்றொரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.