தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி.

தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் 2020இன் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமைக்காக அறிக்கையிட்ட 216பட்டதாரிகளில் இரண்டாவது பிரிவினரான தனியார் நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள் பெறவுள்ள 39பேருக்கான முன்னாயத்த பயிற்சியின் ஆரம்ப வழிகாட்டல் நிகழ்ச்சி 14.09.2020 திங்கட்கிழமை பி.ப 02.00மணிக்கு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் பட்டதாரி பயிற்சிக்கான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் பங்குபற்றலுடன்  மாவட்ட செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றுள்ளது.
இப் பயிற்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான அறிவுறுத்தல்களை  பயிற்சிக் குழுவுக்கான  விரிவுரையாளர் பிரிகேடியர் வசந்தபாலங்குமுற அவர்களால் பயிலுனர்களுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பயிலுனர்கள் தமக்கேற்பட்ட சந்தேகங்கள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டனர்.
குறித்த பயிற்சிக்கான குழுவினர் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா ஒவ்வொரு கிழமைகளை உள்ளடக்கியதாக வங்கிகள், சமுர்க்கி வங்கிகள், ஹற்றாமணி தொழிற்சாலை ஆகியவற்றில் பயிற்சிகளை பெறவுள்ளனர்.
இதேவேளை ஏனைய குழுவினருக்கான பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி  தலைமைத்துவ குழுச்செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள் இராணுவத்தினால் வதிவிடப்பயிற்சியாகவும், முகாமைத்துவ பயிற்சிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தினாலும், அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான பயிற்சிகள் குறித்த பிரதேச செயலகங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம காலப்பகுதிகளை உள்ளடக்கிய ஐந்து துறைசார் பயிற்சிகள் சுழற்சி முறையில் சகல பயிலுனர்களும் பெறுவதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.