மக்கள் யார் பக்கம் என்பதை தேர்தல் நடந்தால் காண்பிப்போம்! – ராஜபக்சக்களின் சகா இறுமாப்பு.
“சனல் – 4 வீடியோ போன்ற சூழ்ச்சிகள் மூலம் ராஜபக்சக்களினதோ அல்லது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினதோ அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது. தேர்தலொன்று நடக்கட்டும், மக்கள் யார் பக்கம் என்பதைக் காண்பிப்போம்.”
இவ்வாறு சூளுரைத்துள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்த்தன.
இது தொடர்பில் அவர் கூறியதாவது:-
“கோட்டாபய ராஜபக்சவை வெற்றிபெற வைக்கவே உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாம் எனக் கூறப்படுகின்றது. 2019 இல்தான் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டது, ஆனால் 2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நாம் அமோக வெற்றியைப் பதிவு செய்து விட்டோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு மொட்டுக் கட்சி அல்ல, நாட்டு மக்கள்தான் கோட்டாபய ராஜபக்சவைக் கோரினர். இதுதான் உண்மை.
அதேவேளை, சனல் – 4 திரைப்படம் இப்ராஹிம் என்பவரை ஏன் மறந்தது? இப்ராஹிம் என்பவர் ஜே.வி.பியின் தேசியப் பட்டியல் வேட்பாளராக இருந்தார். அவரின் இரு மகன்மார் தற்கொலை குண்டுதாரிகள். இந்த விடயம் ஏன் மறக்கப்பட்டது? இப்படியான நகர்வுகள் மூலம் எமது அரசியல் பயணத்தைத் தடுக்க முடியாது.” – என்றார்.