கோட்டாபயவுக்கு, ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உயிரிழந்தவர்களின் உறவினர்கள் முயற்சி !
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பிரித்தானிய சனல் 4 அலைவரிசை வெளியிட்ட தகவலின் அடிப்படையில் , நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சில அதிகாரிகள் மீது வழக்குத் தொடர வேண்டும் என தாக்குதலில் உயிரிழந்த வெளிநாட்டினரின் உறவினர்கள் பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த தாக்குதலில் நாற்பத்திரண்டு (42) வெளிநாட்டவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், மேலும் இறந்த வெளிநாட்டவர்களில் டேனிஷ் பில்லியனர் Anders Holch Povlsen மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட உள்ளூர் விசாரணைகளில் அதற்குக் காரணமானவர்களையும் அதன் மூளையாக செயற்பட்டவர்களையும் குறிப்பிட்டு அடையாளம் காணாத காரணத்தினால் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் உறவினர்கள் சம்பவம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய வாய்ப்பில்லாதிருந்தது.
ஆனால் சனல் 4 ஒளிபரப்பிய காணொளி மூலம் , தாக்குதல் திட்டமிடலில் ஈடுபட்ட அசாத் மௌலானா, ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை ஆட்சிக்கு கொண்டு வரவே இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டது என்று உறுதியாக கூறியுள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த சனல் 4 காணொளியின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் பல அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தற்போது கவனம் செலுத்தி வருவதாக அறியமுடிகின்றது.