‘வருமானத்தை மறைக்கும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது’ – டெல்லி நீதிமன்றம்
உண்மையான வருமானத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க மறுக்கும் பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கில் இந்த உத்தரவை தனி நீதிபதி விகாஸ் மகாஜன் பிறப்பித்துள்ளார்.
மேல் முறையீடு செய்த பெண்ணுக்கு கடந்த 2014, ஏப்ரல் 21 ஆம் தேதி திருமணம் முடிந்துள்ளது. இதன் பின்னர் சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். அந்த நேரத்தில் பணியில் இருந்த மனைவி, 2015 மே 22 ஆம் தேதி பணி நிறுத்தம் செய்திருக்கிறார்.
விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த சூழலில் இருவருக்கும் இடையே பிரச்னைகள் தீர்ந்துள்ளது. இதையடுத்து 2016 பிப்ரவரி 6 ஆம் தேதி விவகரத்து மனு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதன்பின்னர் மீண்டும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கணவர் மீது போலீசில் மனைவி புகார் அளித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து மீண்டும் விவாகரத்து கேட்டு கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின்போது மாதம் தனக்கு ரூ. 35 ஆயிரம் ஜீவனாம்சத்தை கணவர் வழங்க வேண்டும் என்று மனைவி கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனைவி மேல் முறையீடு செய்துள்ளார். இதனை நீதிபதி விகாஸ் மகாஜன் விசாரித்தபோது அவர் கூறியதாவது-
மனுதாரர் ஏற்கனவே பணியில் இருந்துள்ளார். அவரது கணவர் பட்டதாரி. மனைவி திருமணம் முடிக்கும்போது எம்.ஃபில் படித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் மேனேஜ்மென்ட் துறையில் பி.எச்.டி முடித்திருக்கிறார்.
இவ்வளவு உயர் படிப்பு படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், இந்த வழக்கில் மனுதாரரின் கல்வி தகுதி அவரது கணவரை விடவும் உயர்ந்ததாக இருக்கிறது. இப்போது உள்ள ஆவணங்களின் படி அவர் வேலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு மனுதாரர் சம்பாதிக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய வருமானம் என்ன என்பதை நீதிமன்றத்தில் அவர் தெரியப்படுத்த வேண்டும். அப்படி உண்மையான வருமானத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்காதவருக்கு ஜீவனாம்சம் வழங்கும்படி உத்தரவிட முடியாது. எனவே ஜீவனாம்சம் கேட்டு மேல் முறையீடு செய்யப்பட்ட இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.