நிபா வைரஸால் 40 – 70% உயிரிழக்கும் அபாயம் – ஐசிஎம்ஆர் எச்சரிக்கை
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்த நிலையில், மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருடன் தொடர்பில் இருந்த ஆயிரத்து 80 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிக்கோடு மாவட்டத்தில் வரும் 24 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை 6 பேர் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நிபா வைரஸ் தொடர்பாக பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் ராஜிவ் பால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறப்பதற்கான விகிதம் 2 விழுக்காடாக இருக்கும் நிலையில், நிபாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணமடைய 40 முதல் 70 விழுக்காடு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில் ஆஸ்திரேலியாவில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்தான monoclonal antibody மருந்து 20 டோஸ்களை மத்திய அரசு வாங்க இருப்பதாக ராஜிவ் கூறியுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக, புதுச்சேரி அரசின் கீழ் உள்ள மாகேயில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இது தொடர்பாக மாகே பிராந்திய மண்டல நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ள உத்தரவில், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நெரிசலான பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாக்கள், கூட்டங்களை ஒத்தி வைக்கலாம் என்றும் அவசியம் என்றால் கட்டுப்பாடுகளை பின்பற்றி நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை, பூங்கா, வணிக வளாகம் போன்ற இடங்களுக்குச் செல்வதை அதிகபட்சம் தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் மக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. சானிடைசர் கொண்டு கைகளை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.