தென் சீனா கடல் வலய வட்ட மேசை மாநாடு இம்முறை இலங்கையில்!
தென் சீனா கடல் வலய 8 ஆவது ஷென்ஸன் வட்டமேசை மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த வட்டமேசை மாநாட்டின் பூர்வாங்க ஏற்பாடு தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
சீனாவின் ஷென்ஸன் வட்டமேசை மாநாடு வருடாந்தம் நடைபெற்று வருவதோடு ஒற்றுமையுடன் ஒன்றாகப் பயணித்து பட்டுப்பாதையின் ஞானத்தை பெறுவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் 22 நாடுகளின் பங்கேற்புடன் இம்முறை மாநாடு இலங்கையில் நடைபெறும் என்றும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காக தொடர்புடைய அரசாங்க நிறுவனங்களின் ஊடாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
பௌத்த மற்றம் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க,பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தொடர்புள்ள அரச நிறுவன அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்கள்.