ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது: பாஜக எம்.பி.க்களுக்கு கனிமொழி பதிலடி
மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டபோது ‘ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது’ என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் நேற்று(செப். 19) மக்களவையில் களிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். தொடர்ந்து இன்று மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
மசோதா மீது திமுக எம்.பி. கனிமொழி பேசத் தொடங்கியபோது பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.
அப்போது கனிமொழி, ‘நான் இன்னும் பேசவே தொடங்கவில்லை. இப்படி நீங்கள் ஹிந்தியில் கூச்சலிட்டால் எனக்கு புரியாது, ஹிந்தியில் பேசினால் எனக்குப் புரியாது, அப்புறம் ஏன் பேசுகிறீர்கள்’ என்றார்.
உடனே அருகில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கனிமொழிக்கு ஆதரவாக அவைத்தலைவரிடம் ‘அவர் இன்னும் பேசவே தொடங்கவில்லை. இதுதான் பாஜகவினர் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா?’ என்று கேள்வி எழுப்பினர்.
முன்னதாக, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் வகையில், மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரக் கோரி மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.