மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு அனுமதி..!
மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்ய எலான் மஸ்கின் நியுரோலின்க் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மூளையில் பொருத்தும் சிப்களை, மனிதர்களிடம் சோதனை செய்ய, பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்க எலான் மஸ்கின் NEURALINK நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. நினைவாற்றல் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கு மூளையின் (செயல்பாட்டை மீட்டெடுக்க இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும்.
அரசின் அனுமதி கிடைத்த நிலையில் இதற்கான பணிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
என்ன திட்டம்?: மனித மூளையில் சிப்களை பொருத்தி, கணினிகள் மூலம் அதை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மனிதர்களின் நோய்களை குணப்படுத்த இந்த சிப்கள் உதவும் என்று அவர் கூறியுள்ளார். யோசித்து பார்க்கவே திகிலூட்டும் இந்த டெக்னலாஜி குறித்து பார்க்கலாம்.
மனித தலையில் சிறிய துளை இட்டு, உள்ளே மூளைக்குள் சிப் ஒன்றை வைத்து மனிதர்களை கணினிகள் மூலம் கட்டுப்படுத்துவது போல ஹாலிவுட் படங்களில் பார்த்து இருப்போம். சிறிய கட்டளை கொடுத்தால் போதும், கணினியின் கட்டளையை ஏற்று மனிதர்கள் செயல்படுவது போல பல ஹாலிவுட் படங்கள் வந்து இருக்கிறது.
படங்களில் மட்டுமே பார்த்து வளர்ந்த விஷயத்தை தற்போது எலான் மஸ்க் நிஜத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார். ஆம், மனித மூளைக்குள் சிப்களை பொருத்தி, அதன்மூலம் பல நினைத்து பார்க்க முடியாத விஷயங்களை செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டு இருக்கிறார்.
எலான் மஸ்க் யார் என்று தெரியாதவர்களுக்கு சின்ன அறிமுகம், உலகின் டாப் 10 பணக்காரர்களில் இவரும் ஒருவர். டெஸ்லா கார் நிறுவனத்தின் ஓனர் இவர்தான். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி அதை எக்ஸ் என்று மாற்றியவர் இவர்தான் . அதேபோல் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஓனரும் இவர்தான். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் தனது டெஸ்லா காரை இவர்தான் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தார். இவர் 80% முதலீடு செய்து இருக்கும் நிறுவனம்தான் நியூரோலிங்க். இந்த நியூரோலிங்க் நிறுவனம்தான் தற்போது மனித மூளைக்குள் சிறிய சிப்களை வைக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
மனித மூளைக்குள் சிறிய, மிக சிறிய சிப்பை வைத்து பல்வேறு விஷயங்களை சாதிப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இதை தற்போது பன்றிகளிடம் பொருத்தி அதில் 87% வெற்றியை பெற்று இருக்கிறது எலான் மஸ்க் நிறுவனம். அதாவது பன்றிகளின் மூளையில் நியூரோலிங்க் நிறுவனத்தின் சிறிய லிங்க் எனப்படும் சிப்பை பொருத்தி உள்ளனர். இதை வைத்து செய்த ஆராய்ச்சி முடிவுகளை எலான் மஸ்க் பொதுவில் வெளியிட்டு இருக்கிறார். அந்த முடிவுகளின் வெற்றி காரணமாக தற்போது மனித சோதனைகள் தொடங்குகிறது.
நியூரோலிங்க் குறித்த விளக்கத்தை எலான் மஸ்க் முன்பே அளித்து இருந்தார். அதில்,
பன்றி 1 – இதில் சிப் எதுவும் வைக்கப்படவில்லை. இது இயல்பாக இருந்தது.
பன்றி 2 – Gertrude என்று பெயர் வைக்கப்பட்ட இந்த பன்றியின் மூளையில் நியூரோலிங்க் வைக்கப்பட்டுள்ளது.
பன்றி 3 – இந்த மூன்றாவது பன்றியின் மூளையில் நியூரோலிங்க் வைக்கப்பட்டு அது பின் நீக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டாவது பன்றியின் செயல்பாடுகள் அனைத்தும் அதன் மூளையில் இருந்து சிப் மூலம் கணினிக்கும் டிரான்ஸ்பர் செய்யப்பட்டது. அதாவது மூளையில் ஏற்படும் மாற்றங்களை கணினிக்கு அந்த சிப் கடத்தியது. இதன் மூலம் அந்த பன்றி என்ன செய்கிறது. என்ன நினைக்கிறது. என்ன சொல்ல வருகிறது என்பது கணினியில் பதிவானது. இதை அப்படியே லைவ் நிகழ்ச்சியில் எலான் போட்டுக்காட்டினார். சிப் நீக்கப்பட்ட பன்றி ஆரோக்கியமாக இருந்தது. சரி இப்படி பன்றிகளின் மூளையில் சிப்களை வைத்து வித்தை காட்டுவதில் என்ன இருக்கிறது? இதனால் என்ன பயன் என்று கேட்கலாம். எலான் மஸ்க் வைத்திருக்கும் திட்டம்.. ”வேறு லெவல் ப்ரோ” திட்டம் என்கிறார்கள்.
இந்த சிப்பை பன்றியின் மூளையில் வைத்தது போலவே மனித மூளைக்குள்ளும் வைக்க முடியும். ஆம் மனித மூளைக்கு உள்ளே ரோபோ கருவிகள் மூலம் சிறிய துளையிட்டு இதை வைக்க முடியும். ரத்தம் வராமல், அனஸ்தீஸ்யா கொடுக்காமல் இந்த ஆபரேஷனை செய்ய முடியும். முப்பது நிமிடத்தில் உங்கள் மூளையில் இந்த சிப்பை பொறுத்த முடியும். அதாவது பன்றிக்கு செய்தது போல உங்களுக்கு சிப் வைத்து கண்காணிக்க முடியும்.
இதற்காக தலையில் சின்ன துளையிட்டால் போதும். இது உங்கள் தலையில் இருப்பதை உங்களால் உணர கூட முடியாது. இந்த சிப்பில் மொத்தம் 3000 எலக்ட்ரோட் கருவிகள் இருக்கும். இதில் இருக்கும் சிறிய அளவிலான, மனித முடியை விட மெல்லிய எலக்ட்ரோட் மூளையில் இருக்கும் நியூரான்கள் உடன் இணைந்து மூளையில் இருந்து சிக்னல்களை அனுப்பும். இதை வெளியே இருக்கும் கணினி மூலம் கண்காணிக்க முடியும்.
எப்படி செயல்படும்: இது எப்படி செயல்படும் என்பதை பின்வரும் வகையில் எளிமையாக விளக்கலாம்.
தலையில் சின்ன துளையிட்டு இந்த சிப்பை மூளைக்குள் செலுத்துவார்கள்.
ரோபோ மூலம் மட்டுமே இந்த ஆபரேஷன் நடக்கும்.
இந்த சிப்பில் இருக்கும் 3000 எலக்ட்ரோட்க்கள் மூளையுடன் இணைக்கப்படும்.
மூளையில் இணையும் இந்த சிப், மூளையில் இருந்து அருகில் இருக்கும் கணினிக்கு சிக்னல்களை தகவல்களை அனுப்ப முடியும். கணினி கொடுக்கும் தகவல்கள் ரிசீவ் செய்ய முடியும்.
ஒரே நேரத்தில் 1024 கணினிகள் உடன் இந்த சிப் இணைய முடியும். ஒரு நாள் முழுக்க இந்த சிப் சார்ஜ் இருக்கும். வயர்லஸ் முறையில் இதை சார்ஜ் செய்ய முடியும். உங்கள் போன் உடன் இதை கனெக்ட் செய்ய முடியும். எல்லோரும் இதை எளிதாக பொருத்திக்கொள்ளலாம். அதேபோல் நினைத்த நேரத்தில் இதை எளிதாக சின்ன ஆப்ரேஷன் மூலம் 30 நிமிடத்தில் நீக்கவும் முடியும். உடலுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று எலான் மஸ்க் சொல்கிறார்.
என்ன செய்ய முடியும்?: இந்த சிப் மூலம் மனிதர்களை கணினி கட்டுப்படுத்தும் என்று நினைத்தால் அது தவறு. இது மனித குலத்தின் நன்மைக்கானது என்று எலான் மஸ்க் கூறுகிறார். என்ன செய்யும் இது?
இதன் மூலம் மனிதர்கள் தங்கள் மூளை மூலம் கணினி, போன்களை கட்டுப்படுத்த முடியும். மூளையின் மூலம் அனைத்து கருவிகளையும் கட்டுப்படுத்த இயக்க முடியும்.
கணினியில் இருந்து சில சிக்னல்களை அனுப்பி பர்கின்சன், அல்சைமர், கண் பார்வை இன்மை, காது கேளாத தன்மை என்று நாள்பட்ட குறைபாடுகளை ஒரே நாளில் குணப்படுத்த முடியும். சிப் மூளைக்கு கட்டளையிட்டு நோய்களையே குணப்படுத்தும்.
அதாவது மூளையில் இருக்கும் செல்களை தூண்டிவிட்டு உடல் குறைபாடுகள் சரி செய்யப்படும்.
மனஅழுத்தம், மறதி ஆகியவை கூட சரி செய்யப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
அதோடு மூளையின் நினைவுகள் இதில் அப்லோட் செய்து, தேவைப்படும் நேரங்களில் இதை சினிமா போல ப்ளே செய்து பார்க்கலாம் என்று கூறுகிறார். அதாவது உங்கள் குழந்தை பருவத்தின் நினைவுகளை இதன் மூலம் மீட்டெடுத்து நீங்கள் அதை பார்க்க முடியும்.
முக்கியமாக கணினிகள் மூலம் எதிர்காலத்தில் உலகில் தவறுகள் நடக்காமல் இருக்க இது வழி செய்யும். எல்லா சாதனமும் நமது மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஏஐ தொழில்நுட்பத்தை இதன் மூலம் எளிமையாக கட்டுப்படுத்த முடியும். மனித எதிர்க்காலம் இந்த சின்ன சிப்பில் இருக்கும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். முடியை விட 8 மடங்கு சிறிய அளவில் இந்த சென்சார்கள் இருப்பதால் மூளைக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மொத்தம் 19 விலங்குகளிடம் இந்த சிப்பை வைத்து சோதனை செய்து இருக்கிறார்கள். தற்போது இதை மனிதர்களிடம் செலுத்தி சோதனை செய்ய எலான் மஸ்க் அனுமதி கேட்டு இருக்கிறார். இந்த வருட இறுதிக்குள் இதை மனிதர்களிடம் சோதனை செய்ய உள்னனர். மிக குறைந்த விலையில் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இதை சந்தைக்கு கொண்டு வருவோம் என்று நிஜ உலகின் டோனி ஸ்டார்க் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.