இன முரண்பாடு வேண்டாம்; ஓரணியில் திரள்வோம்! – சுசில் அறைகூவல்.
மீண்டும் மக்களுக்கிடையில் இன முரண்பாடுகள் வேண்டாம் எனவும், மக்கள் இன ரீதியில் முட்டிமோதுவதால் நாட்டுக்கும் எதிர்காலச் சமுதாயத்துக்கும்தான் பெரும் பாதிப்பு எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எனவே, மக்கள் அனைவரும் இன வேறுபாடின்றி ஒரே குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் எனவும், இதுவே இன்றைய காலத்தின் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் கடந்த காலத்தில் இன வன்முறையால் – ஆயுதப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு இனத்தவர்களுக்கும் அந்த வலியும் வேதனையும் இன்னமும் இருக்கின்றது. இதை ஒவ்வொரு இன மக்களும் உணர்ந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இதைப் புரிந்துகொண்டு கஜேந்திரன் எம்.பி. தலைமையிலான குழுவினர் அன்று செயற்பட்டிருந்தால் திருகோணமலை அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம். எனினும், கஜேந்திரன் எம்.பி. மீது தாக்குதல் நடத்திய அறுவர் மறுநாளே கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு எதிரான தண்டனையை நீதிமன்றம் வழங்கும்.” – என்றார்.