12 ஆண்டுகள் கழித்து தீவிரமாகும் சீமான் – விஜயலட்சுமி விவகாரம்: இன்று விசாரணை
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், அவர், என்னை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர், 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை கடிதம் மற்றும் விசாரணையில் அடிப்படையில் காவல்துறை முடித்து வைத்துள்ள நிலையில், தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறினார்.
அதுமட்டுமல்லாமல், 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால் இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011 ஆம் ஆண்டு விஜயலட்சுமி அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டு வாபஸ் பெற்ற நிலையில், 2023 ஆம் ஆண்டு புதிதாக புகார் அளித்து, ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டுள்ளது என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், மனு நகல் தரப்படவில்லை என காவல் துறை தரப்பில் கூறியதைடுத்து, புகார் குறித்த விவரங்களை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என காவல்துறை பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26 ஆம் திகதிக்கு தள்ளிவைத்தும் உத்தரவிடப்பட்டது. தற்போது, சீமானுக்கு எதிரான இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.