பிரேமலாலை (சொக்காமள்ளி) கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த DIG லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை!

சப்ரகமுவ மற்றும் யாழ் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கஹவத்தை பிரதேசத்தில் ஐதேக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு சேதம் விளைவித்து , சாந்த தொடங்கொடவை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக மொட்டுக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை (சொக்காமள்ளி) கைது செய்ய வேண்டாம் என கஹவத்தை நிலைய கட்டளைத் தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமைக்காக லலித் ஜயசிங்க இந்த சிறைத்தண்டனையைப் பெற்றுள்ளார்.


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

2015 ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கஹவத்தை பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தந்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.


யாழ். புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலை தொடர்பான விசாரணையின் போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க குற்றவியல் திணைக்களத்தினால் 2017.07.15ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியில் வாழ்ந்த வித்யா என்ற பாடசாலை மாணவி கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு எதிராக சட்டமா அதிபர், யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிச் செல்ல உதவினார் என்ற குற்றச்சாட்டில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீகஜன் என்ற பொலிஸ் அதிகாரிக்கு எதிராகவும், சட்டமா அதிபர் இந்த வழக்கில் மேலதிக குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.