மணிப்பூரில் மாணவன், மாணவி கடத்திக் கொலை: மீண்டும் பதற்றம்
மணிப்பூரில் ஒரு மாணவன் மற்றும் மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய நிலையில், பொதுமக்கள் அமைதி காக்க மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து இனமோதல் நீடித்து வருகிறது.
மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.
இருதரப்பினரும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால், உயிா்ச்சேதங்கள் தொடா்கதையாகி வருகின்றன. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா்.
இந்நிலையில், ஃபிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். இருவரின் கைப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.
அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனா்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது.
ஆயுதமேந்திய கும்பலிடம் அவா்கள் பிணைக்கைதியாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசு வேண்டுகோள்: இதனிடையே, மாநில முதல்வா் பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது. இக்கொடூர குற்றத்தில் தொடா்புடைய அனைவா் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தில் 45 போ் காயம்
மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் செவ்வாய்க்கிழமை பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, முதல்வா் அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அவா்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 45 போ் குறிப்பாக மாணவிகள் காயமடைந்தனா்.
போராட்டக்காரா்கள் கூறுகையில், ‘கொலையான இருவரின் உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன? என்பது இன்னும் தெரியவில்லை. கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்குகிறது’ என்று குற்றம்சாட்டினா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இணைய சேவை மீண்டும் முடக்கம்: மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அண்மையில் நீக்கப்பட்டது. ஆனால், தற்போதைய போராட்டங்களின் எதிரொலியாக அடுத்த 5 நாள்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.