குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
தென்காசி மாவட்டம் கடையம், ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விடுமுறை தினத்தையொட்டி பேருந்தில் உதகைக்கு சுற்றுலா சென்றனர். அங்கு தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு மருதமலை செல்வதற்காக நேற்று குன்னூர் வழியாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். மரப்பாலம் அருகே மிகவும் குறுகலாக உள்ள 9வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவர் மீது மோதி மலைச்சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, பேருந்து 50 அடி பள்ளத்தில் மரம் ஒன்றில் சாய்ந்து கிடந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாய்ந்து கிடந்த பேருந்தின் வாய் பகுதி மேல்புறம் இருந்ததால் அதன் வழியாகவும் ஜன்னலை உடைத்தும் பயணிகள் மீட்கப்பட்டனர். இதில் பேருந்தில் பயணம் செய்த நித்தின் கண்ணா என்ற 15 வயது சிறுவன், தேவிகா, முருகேசன், கவுசல்யா, இளங்கோ, முப்புடாதி, ஜெயா, தங்கம் ஆகிய 8 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
40 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் குன்னூர் மருத்துவமனைக்கும், படுகாயமடைந்த 4 பேர் உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்க 25 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், சிறப்பு மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த பேருந்தை மீட்கும் பணி இன்று காலை நடைபெற்றது. அப்போது பேருந்துக்கு அடியில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.