சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு, 82 பேர் மாயம்..!
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லோனாக் ஏரி பகுதியில் மேகத்திரள் வெடிப்பால் கனமழை கொட்டியது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுங்தாங் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, லாச்சென் சமவெளியில் பாயும் டீஸ்டா நதியில் திடீரென 15 முதல் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
டீஸ்டா நதியில் சுனாமி போன்று எழுந்து வந்த வெள்ளப்பெருக்கால் பர்தாங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில், 23 ராணுவ வீரர்கள் உட்பட 82 பேர் மாயமாகினர். சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனங் என்ற கிராமத்தில், ஒரு ராணுவ வீரர் மட்டும் பாதுகாப்பாக கரை சேர்ந்தார். எஞ்சிய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த, லோனாக் ஏரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசு மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.