குன்றும் குழியுமான வீதியால் பொது போக்குவரத்து பாதிப்பு மக்கள் கவலை.

பசறையிலிருந்து மடூல்சீமை வழியாக பிட்டமாருவை கிராமத்தை நோக்கி செல்லும் பாதை பல வருடங்களாக செப்பனிடப்படாத காரணத்தால் சேதமடைந்து குன்றும் குழியுமாக காணப்படுவதால் இப்பாதையுடான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதியில் வாழும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மடூல்சீமையில் இருந்து பிட்டமாருவை செல்லும் வழியில் டூமோ, ஊவாக்கலை, கல்லுல்லை, கொக்காக்கலை, ராகலை, எலமான் மற்றும் ரோபேரி போன்ற பெருந்தோட்டங்களும் காணப்படுகின்றன.

கொக்காக்கலைக்கும் பிட்டமாருவைக்கும் இடையே சுமார் 10கிலோமீற்றர் வரையான பகுதி பல வருடங்களாக செப்பனிடப்படாமல் உள்ளது. இப்பாதையினூடாக பதுளை டிப்போவிற்கு சொந்தமான இ.போ.சபை பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் சேவையில் ஈடுபடுகின்றன.

பாதை சேதமடைந்துள்ளதால் பஸ் வண்டியின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் ஒன்றிணைந்து தினமும் செப்பனிட்டு பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாதை சீர்கேடு காரணமாக அடிக்கடி பஸ் வண்டிகள் பழுதடைந்து சேவையை நிறுத்தி கொள்கின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட பஸ் சேவையே இடம் பெறுவதால் இப்பகுதியில் இருந்து பட்டாவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கால்நடையாகவும் மாணவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து பாடசாலைக்கு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.