சில அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி வியூகம்.
வரவு – செலவுத் திட்டத்தின் சில அமைச்சுக்கள் மீதான நிதி ஒதுக்கீட்டைத் தோற்கடிப்பதற்கான முயற்சியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஈடுபடும் எனத் தெரியவருகின்றது.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதீட்டை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.
அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி 2ஆவம் வாசிப்புமீதான விவாதம் ஆரம்பமாகும். 2ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
3ஆம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகும். டிசம்பர் 13 ஆம் திகதி பாதீடு மீது இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.
பாதீட்டு விவாதத்தில் அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் தனித்தனியாக விவாதம் நடத்தப்படும்.
இதன்போது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ள அமைச்சுகளுக்கான ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் எதிரணி வாக்கெடுப்பைகோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சக்தி அமைச்சு, விவசாய அமைச்சு, சுகாதார அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு உட்பட மேலும் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க முயற்சி எடுக்கப்படுகின்றது.
அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்குச் சாதாரண பெரும்பான்மை (113) போதும் என்ற நிலையில், அதற்கான பலம் அரச தரப்பில் உள்ள நிலையில், இப்படியானதொரு முயற்சியில் ஈடுபடுவது ஏற்புடைய நடவடிக்கையா என்ற கேள்வியும் எதிரணி தரப்பில் எழுந்துள்ளது.
ஆனால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்த இதுவும் ஒரு நகர்வாக இருக்கும் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேவேளை, பாதீட்டு விவாத காலப்பகுதியில் ஆளுங்கட்சியினரை கொழும்பிலேயே இருப்பதற்கான ஆலோசனை ஆளுந்தரப்பில் இருந்து விடுக்கப்படவுள்ளது.