கப்பல் போக்குவரத்து ‘நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்’: மோடி பேச்சு
இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை “நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல்” என்றும் இதன் மூலம் இருநாட்டு கலாசாரம், தொழில் வர்த்தகம் மேம்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை (அக். 14) தொடங்கிவைத்தார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை (அக். 14) காலை 8 மணிக்கு பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை “இரு நாடுகளுக்கு இடையேயான நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல். இரு நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளோம்”. இதன் மூலம் இருநாட்டு கலாசாரம், தொழில் வர்த்தகம் மேம்படும்.
இந்தியாவும் இலங்கையும் கலாசாரம், வர்த்தகம் மற்றும் நாகரீகத்தின் ஆழமான வரலாற்றைப் பதிவை கொண்டுள்ளவை. “நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் நீண்ட காலமாக இலங்கை உள்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு பெயர் பெற்றவை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பூம்புகார் துறைமுகம் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சுப்ரமணிய பாரதியாரின் ‘சிந்து நதியின் மிசை’ பாடலில், பட்டினப்பாலை, மணிமேகலை முதலிய சங்க இலக்கியத்தில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கடல்வழி போக்குவரத்து இருந்ததற்கான சான்றுகள் உள்ளது. இந்த படகு சேவை அந்த வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளை உயிர்ப்பித்திருக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டாண்மையின் மையக் கருப்பொருள் இணைப்பு என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, “அண்மையில் அதிபா் ரணில் விக்ரமசிங்க இந்தியா பயணத்தின் போது, நமது பொருளாதாரப் பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இரண்டு நகரங்களைக் கொண்டுவருவது மட்டுமல்ல. மேலும் இது நமது நாடுகளை நெருக்கமாக்குவது, நமது மக்களை நெருக்கமாக்குவது மற்றும் நமது இதயங்களை நெருக்கமாக்குவது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.”
2015 முதல் இரு நாடுகளுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பில் மேம்பட்ட ஒத்துழைப்பு இருப்பதாக பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.
2015 இல் நான் இலங்கைக்கு பயணம் செய்ததைத் தொடர்ந்து, தில்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர், இலங்கையிலிருந்து குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம். 2019 இல் சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் நேரடி விமான சேவை தொடங்கியது. தற்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை மற்றொரு முக்கியமான படியாகும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் இருந்து சுமாா் 60 கடல்மைல் தொலைவில் உள்ள இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் ‘செரியபானி’ என்ற இந்தப் பயணிகள் கப்பல் 3 மணி நேரத்தில் சென்றடையும். இந்த சேவை எளிதாக்க மத்திய அரசு நாகப்பட்டினம் துறைமுகத்தை ரூ.3 கோடி செலவில் தூர்வாரியது.
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் காணொலி காட்சியில் கலந்து கொண்டார்.