வளவாளர்களை உருவாக்கும் மூன்று நாட் பயிற்சிப்பட்டறை.
சிறுவர் சார்ந்த அனர்த்த இடர் தணிப்பு பயிற்சிக்கான வளவாளர்களை உருவாக்கும் மூன்று நாட் பயிற்சிப்பட்டறை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு (SOND) மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து சிறுவர்களை மையப்படுத்திய மழை மற்றும் அனர்த்த தயார் நிலை திட்டமிடலுக்கான சிறுவர் சார்ந்த அனர்த்த இடர் தணிப்பு பயிற்சிக்கான வளவாளர்களை உருவாக்கும் மூன்று நாட்களைக் கொண்ட பயிற்சிப்பட்டறையானது 14ம், 15ம், 17ம் திகதிகளில் குறித்த நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச.செந்துராசா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பயிற்சியின் வளவாளர்களாக யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான மிசிலர்(கொழும்பு) மற்றும் சர்மிலி(கிளிநொச்சி) ஆகியோர் விரிவுரையாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். விரிவுரை, குழுக்கலந்துரையாடல் மற்றும் பயிற்;சி மண்டபத்தில் பெற்றுக்கொண்ட அறிவினைப்பயன்படுத்துவாதாக கள்ளப்பாடு கிராமத்திற்கு ஆபத்து மதிப்பீடு தொடர்பான களப்பயணம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெற்றுக்கொண்ட பயிற்சிகனை கிராம மட்டங்களில் முன்னெடுத்துச்செல்லுங்கள்.
பயிற்சிப்பட்டறைகளில் கலந்து கொண்டு நீங்கள் பெற்றுக்கொண்ட அறிவுசார் பயிற்சிகளை கிராம மட்டங்களில் முன்னெடுத்துச் செல்லுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க. விமலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேற்குறித்த பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாளினை ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கிராம மட்ட அமைப்புக்கள் சார்ந்த உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்குகள் அளிக்கப்பட வேண்டும். இத்தகைய செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற SOND நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். சிறுவர் சார்ந்த துறைகளைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் அதிகமாக பங்குபற்றியுள்ளீர்கள். அனர்த்தங்கள் சிறுவர்களை மையப்படுத்தியதாக அதிகம் காணப்படுகிறது. அதற்கான பிரச்சினைகளை இனங்கண்டு தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். விழிப்புனர்வுகள் அதிகமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எனவே நீங்கள் பெற்றுக்கொண்ட பயிற்சி அனுபவங்களை கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். அதனூடாகவே மக்களை ஊக்குவிக்க முடியும். இத்தகைய செயற்பாடுகளே பயிற்சிப்பட்டறைகளின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும். அப்போதுதான் அனர்த்தத்தை எதிர்நோக்குகின்ற மக்களிடம் வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்தார்.
SOND நிறுவனம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுடன் இணைந்து மூன்று நாட்கள் ஏற்பாடு செய்த குறித்த பயிற்சிப்பட்டறையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் சி.லிங்கேஸ்வரகுமார் அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கல்வித்திணைக்களம், உள்ளுராட்சித்திணைக்களம், சிறுவர் பிரிவு ஆகியவற்றினைச் சேர்ந்த முப்பத்திரண்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.