போட்டி போட்டுக்கொண்டு வாக்குறுதிகளை வாரி இரைக்கும் அரசியல் கட்சிகள்
தமிழ்நாட்டில் 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும் பேசு பொருளாக மாறியது சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் வாக்குறுதிகள். மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த துலாம் சரவணன் என்பவர் தேர்தலில் தான் வெற்றி பெற்றால் தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல்குள வசதியுடன் கூடிய மூன்று அடுக்கு வீடு, வீட்டுக்கு ஒரு கார், ஹெலிகாப்டர், 100 நாள் பயணமாக நிலவுக்குச் சுற்றுலா, பெண்களின் திருமணத்துக்கு 100 சவரன் நகை என சாத்தியமே அல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசினார்…
இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பொது மக்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு வாக்குறுதியை தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளது மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி. மத்திய பிரதேசத்திற்கு ஒரு ஐபிஎல் அணி என்பதே அக்கட்சியின் வாக்குறுதி. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2008-ல் தொடங்கிய போது, எட்டு அணிகள் இடம்பெற்று இருந்தன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்கு அணிகள் அறிவிக்கப்பட்டன. இதனால், அந்த மாநில ரசிகர்கள், தங்களது மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் ஆடுகிறார்களோ இல்லையோ, அந்த அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இதற்கு சிறந்த உதாரணம் தமிழ்நாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் தல தோனி. இருப்பினும் முக்கிய மற்றும் பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பிகார், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு என ஐபிஎல் கிரிக்கெட் அணி இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன், குஜராத் மாநிலத்திற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும், உத்தரபிரதேசத்திற்கு லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணியும் ஐபிஎல்-லில் சேர்க்கப்பட்டன.
இப்படி நாட்டின் பத்து பெரிய மாநிலங்களுக்கு ஐபிஎல் அணி உள்ள நிலையில், மத்திய பிரதேசம், பிகாருக்கு என ஐபிஎல் அணிகள் இல்லை. இதனால் இந்த மாநிலங்களின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் போட்டிகளின் போது எந்த அணியை ஆதரிப்பது என்று தெரியாமல் ஒருவித குழப்பம் இருந்து வந்தது. தற்போது மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏராளமான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாரி இரைத்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு, மாணவர்களுக்கு ப்ளஸ் 2 வரை இலவச கல்வி, இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு 500 ரூபாய் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக மத்திய பிரதேச மாநிலத்திற்கு என தனி ஐபிஎல் அணி கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்.
இதே வாக்குறுதியை பாரதிய ஜனதா கட்சியும் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஐபிஎல் அணிகளை தனியார் நிறுவனங்களே வைத்துள்ளன. அப்படியே காங்கிரஸ் அல்லது பா.ஜ.க ஆட்சி அமைத்தாலும், ஒரு மாநில அரசால் ஐ.பி.எல். அணியை வாங்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. கிரிக்கெட் வாரியமே மத்திய அரசோ அல்லது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலோ இல்லை. இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் முக்கிய நகரான குவாலியர் பெயரில் ஐபிஎல் அணி உருவாக்க மாநில அரசால் முடியுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது. இது நிறைவேற்றவே முடியாத வாக்குறுதியா என்ற குழப்பமும் கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே எழுந்துள்ளது.
ஒருவேளை, கமல்நாத் நினைத்தால் தனது நிறுவனத்தின் மூலம் தனிப்பட்ட முறையில் ஐபிஎல் ஏலத்தில் போட்டியிட முடியும். காரணம், அவர் பெரும் கோடீஸ்வரர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல்நாத்தின் மகன் நகுல் நாத் தனது சொத்து மதிப்பாக ரூ.660 கோடி என கணக்கில் காட்டியுள்ளார். இப்படி அந்த மாநிலத்தில் உள்ள பெரும் செல்வந்தர்களான அரசியல்வாதிகளால் தான், இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் ரசிகரகளின் ஏக்கத்தை யார் நிறைவேற்றப் போகிறார்கள் என்பது தேர்தல் முடிவை பொறுத்தே அமையும்.