அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது! – இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதால் அதுவரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி வழங்க முடியும் என்றும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.
இந்நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் வாய்ப்பை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 50 கோடி டொலர்களுக்கு அதிகமான அந்நியச் செலாவணியை நாட்டில் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக,
“கடந்த காலங்களில் எமது நாடு பாரிய எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. எரிபொருள் வரிசைகள் ஏற்பட்டன. அதேபோன்று விமானங்களுக்கு அவசியமான எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் நாடு பாரிய சிக்கலுக்கு உள்ளானது. ஆனால் மிகவும் குறுகிய காலத்திலேயே அந்த நிலையில் இருந்து முழுமையாக மீண்டுவர எம்மால் முடிந்தது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என்பது, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்த மாதமாகும். அன்று ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 50 அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆனால், தொடர்ந்து வந்த நான்கு, ஐந்து மாதங்களுக்குள் அது 65 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது. அதன் பின்னர் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் காரணமாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை சுமார் 100 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்தது.
அதன் பின்னர் கடந்த காலங்களில் ஏற்பட்ட சர்வதேச நிலைமைகள் காரணமாக அது 80 அமெரிக்க டொலர்கள் வரை குறைவடைந்தது. எனவே 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குறைவாக இருந்து, படிப்படியாக அதிகரித்து வந்த மசகு எண்ணெய் விலை, இந்த வருடம், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஓரளவு குறைந்துள்ளது. குறிப்பாக இந்த மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து ஆறாம் திகதி வரை உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை சுமார் 4 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.
ஆனால் அண்மையில் காசா பகுதியில் ஏற்பட்ட மோதல் காரணமாக உலக சந்தையில் அனைத்து எரிபொருள் வகையினதும் விலை, கிட்டத்தட்ட 4 சதவீதத்தால் மீண்டும் அதிகரித்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு எமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம் சில நாட்களுக்குள்ளேயே கைநழுவி விடும் நிலை தோன்றியுள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் எரிபொருள் உற்பத்தி அல்லது உலக சந்தைக்கு எரிபொருள் விநியோகிக்கும் நாடுகள் இல்லாவிட்டாலும் கூட ஈரானிலும் இந்த மோதல் சூழ்நிலையின் பதற்றம் காணப்படுவதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்கால உலக சந்தை நிலவரங்கள் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொள்வது மிகவும் கடினமாகவே உள்ளது.
அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை அவசியமான எரிபொருளுக்கான டெண்டர் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக எமக்கு அவசியமான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக 20 கோடி டொலர்கள் கையிருப்பை நாம் பேணி வருகின்றோம். இதன் காரணமாக விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதுடன், அதன் மூலம் நுகர்வோருக்குத் தேவையான எரிபொருளை எவ்வித சிக்கலும் இன்றி விநியோகிக்க முடியும்.
மேலும், எரிபொருள் கொள்வனவுக்காக கடந்த காலங்களில் பெற்றிருந்த கடன்களை மீளச்செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் சுத்திகரிப்புப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.
அதேபோன்று, எமக்குத் தேவையான அனைத்து வகையான எரிபொருள்களையும் ஒன்று அல்லது ஒன்றரை மாதங்களுக்கு சேமித்து வைக்கும் களஞ்சிய வசதியே எம்மிடம் இருக்கின்றது. அதன் காரணமாக உலக சந்தையில் விலை குறையும்போது அதன் பலனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளதால், களஞ்சிய வசதியை அதிகரிக்கவும் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இந்நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் வாய்ப்பை சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கியதன் மூலம் வருடத்திற்கு சுமார் 50 கோடி டொலர்களுக்கு அதிகமான அந்நியச் செலாவணியை நாட்டில் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.” – என்றார்.