இந்திய எல்லையில் படை பலத்தை அதிகரித்த சீனா: பென்டகன் அறிக்கை
இந்தியாவுடனான எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா கடந்த 2022-ஆம் ஆண்டில் படை பலத்தையும் உள்கட்டமைப்பை வசதிகளையும் அதிகரித்ததாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் இந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய-சீன எல்லையில் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் முதலே பதற்றம் ஏற்படத் தொடங்கியது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டையொட்டிய பகுதிகளில் எல்லை வரையறை தொடர்பாக இந்திய ராணுவத்துக்கும் சீன ராணுவத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இச்சூழலில் இரு தரப்பிலும் எல்லையையொட்டிய பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது பல்வேறு மோதல்களுக்கு வழிவகுத்தது. கடந்த 2022-இல் இந்தியாவுடனான எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா படைபலத்தையும் உள்கட்டமைப்பை வசதிகளையும் அதிகரித்தது. டோக்லாம் அருகே தரைக்கு அடியிலான கிடங்கு வசதிகள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய மூன்று பகுதிகளில் புதிய சாலைகள் அமைப்பு, பூடான் எல்லையையொட்டிய பகுதிகளில் புதிய கிராமங்கள் உருவாக்கம், பாங்கோங் ஏரி மீது இரண்டாவது பாலம், எல்லையின் மத்திய பகுதியில் ஒரு விமான நிலையம், பல்வேறு ஹெலிபேட்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
மேலும் 2022-இல் எல்லைப் பகுதியில் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படைப்பிரிவை சீனா குவித்தது.
அதற்கு ஆதரவாக ஜின்ஜியாங் மற்றும் திபெத் ராணுவ மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு படைப்பிரிவுகளும் குவிக்கப்பட்டன. எல்லையின் மேற்குப் புறத்தில் மூன்று ஒருங்கிணைந்த ஆயுதப் படைகளும் நிறுத்தப்பட்டன.
கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் சீனாவின் மேற்கத்திய கட்டளைப் பிரிவு ஏராளமான படைவீரர்களைக் குவித்தது. கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா படைகளைக் குவிப்பது 2023-ஆம் ஆண்டிலும் தொடரும்.
சீனாவிடம் 500-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. வரும் 2030-ஆம் ஆண்டில் அவற்றின் எண்ணிக்கை 1,000-ஆக உயரும் என்று பெண்டகனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தையில் குறைந்த அளவிலான முன்னேற்றமே ஏற்பட்டது.
ஏனெனில் எல்லையில் தங்களுக்குச் சாதகமான நிலைமையை இழப்பதை இரு தரப்பும் எதிர்த்ததே இதற்குக் காரணமாகும்.
எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவாத வரை சீனாவுடனான உறவுகள் சுமுகமாக இருக்காது என்பது இந்தியாவின் கருத்தாகும்.