திறந்தவெளிச் சிறைச்சாலை… காஸா
பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் வாழும் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையைக் கற்பனை செய்து பாருங்கள்… அதுதான் காஸா. எந்தப் பக்கமும் வெளியேற முடியாமல், தடுப்புகளால் சூழப்பட்ட பெருநிலம்
அது ஒரு துண்டு நிலம்… மத்தியத் தரைக்கடலுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீள்செவ்வக வடிவில் இருக்கும் துண்டு நிலம். காஸா என்று அழைக்கப்படும் அந்தப் பிரதேசத்தின்மீது உலகின் கவனம் இப்போது குவிந்திருக்கிறது. வெறும் 365 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த வெப்பப் பிரதேசத்தில் சுமார் 20 லட்சம் பாலஸ்தீனர்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலும் அரபு முஸ்லிம்கள்; கிறிஸ்தவர்களும் சிலர் இருக்கிறார்கள். உலகிலேயே மக்கள் மிகுந்த நெரிசலாக வாழும் மூன்றாவது பிரதேசம் இது.
இலங்கை இறுதி யுத்தத்தில் வடக்கு கிழக்கில் வாழ்ந்த பெரும்பாலான தமிழர்களை கிட்டத்தட்ட மனிதக்கவசங்களாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினர். கடைசி நாளில் முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலை ஒரு சிறிய துண்டு நிலத்தில் நம் உறவுகள் எதிர்கொள்ள நேர்ந்தது. அந்தத் துயரத்துக்குச் சற்றும் குறைவில்லாத ஒன்று இப்போது காஸாவில் நிகழ்கிறது. உலகின் வலிமையான ராணுவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்ரேல் ஈவு இரக்கமின்றி நடத்தும் தாக்குதலில் காஸா நொறுங்கிக் கிடக்கிறது. இஸ்ரேல் முறைப்படி தரைவழித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பாகவே காஸாவில் 2,750 பேர் இறந்திருக்கிறார்கள். 10,000 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் வாழும் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையைக் கற்பனை செய்து பாருங்கள்… அதுதான் காஸா. எந்தப் பக்கமும் வெளியேற முடியாமல், தடுப்புகளால் சூழப்பட்ட பெருநிலம். ‘‘இறந்தவர்களின் சடலங்களைப் பத்திரமாக வைக்கக்கூட எங்களிடம் பிணவறைகள் இல்லை. ஐஸ் கொட்டிய லாரிகளில் சடலங்களைப் போட்டு வைத்திருக்கிறோம்’’ என்று இறைஞ்சும் இவர்களின் குரல் யார் காதுகளிலும் விழவில்லை. காஸாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் வட்டார இயக்குநர் அகமது அல் மந்தாரி, ‘‘குறைந்தபட்சம் மருந்துகளையும் தண்ணீரையுமாவது உள்ளே கொண்டுவர அனுமதியுங்கள்’’ என்று மன்றாடுகிறார். ‘‘அடுத்த 24 மணி நேரத்துக்கான தண்ணீர், மின்சாரம், எரிபொருள் மட்டுமே எஞ்சியிருக்கிறது. இவையெல்லாம் தீர்ந்துபோனால், போர் நடத்தாமலே இங்கு நிறைய பேர் செத்துப் போவார்கள். மருத்துவமனைகளில் இருக்கும் எல்லா நோயாளிகளுக்கும் இறப்புச் சான்றிதழ் தருவதைத் தவிர டாக்டர்களுக்கு வேறு வேலை இருக்காது’’ என்கிறார் அவர்.
இந்த எல்லாவற்றுக்கும் தொடக்கப்புள்ளி, ஹமாஸ் நடத்திய ஒரு தாக்குதல். ஒரு தீவிரவாத அமைப்பாக உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹமாஸ் இயக்கம், காஸா பகுதியின் ஆட்சியாளர்களாக அமைந்தது அந்த மக்களின் துரதிர்ஷ்டம்தான்.
யூதர்களுக்காக இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட புதிதில், ஜோர்டான், எகிப்து என அண்டை நாடுகளுடன் அது போரிட்டுப் பெரும் நிலப்பரப்புகளைப் பிடித்தது. இவற்றில் பாலஸ்தீனர்களின் நிலங்களாகக் கருதப்பட்டவை, ஜோர்டான் நதியின் மேற்கில் இருக்கும் மேற்குக்கரை, இஸ்லாமியர்களின் புனிதமான அல் அக்ஸா மசூதி இருக்கும் கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா நிலப்பரப்பு ஆகிய மூன்றும்தான். ஆனால், இந்த மூன்று நிலப்பரப்புகளிலுமே யூதக் குடியிருப்புகளை வலுக்கட்டாயமாக இஸ்ரேல் அமைத்து வந்தது. இப்படிப்பட்ட சூழலில் 1993-ம் ஆண்டு ஆஸ்லோ அமைதி ஒப்பந்தப்படி, மேற்குக்கரையிலும் காஸா முனையிலும் பாலஸ்தீனர்களின் சுயாட்சிக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்தது. (அப்போதுகூட அது ஜெருசலேமை விட்டுத்தரவில்லை!) ராணுவம், விமானப் போக்குவரத்து போன்ற முக்கியமான துறைகள் அத்தனையும் இஸ்ரேல் வசம் இருக்க, உள்ளாட்சி நிர்வாகம் போன்ற சில துறைகளில் மட்டும் பாலஸ்தீனர்களுக்கு சுயாட்சி தரப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் அரசியல் பிரிவான ஃபதா என்ற கட்சி பாலஸ்தீனத்தை ஆட்சி செய்தது. 2006-ம் ஆண்டு தேர்தலில் ஹமாஸ் அமைப்பு ஜெயித்து ஆட்சியைப் பிடிக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், அந்த அமைப்பு காஸா முனையில் மட்டும் அதிகாரத்தைச் செலுத்துவது போல ஏற்பாடு செய்துகொள்ளப்பட்டது.
மதச்சார்பற்ற ஃபதா கட்சி போல ஹமாஸ் இல்லை. எகிப்து நாட்டின் முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்பு போல பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்டது ஹமாஸ். ஒரு தொண்டு நிறுவனம் போல ஆரம்பிக்கப்பட்ட இது, பிற்காலத்தில் ஆயுதத் தாக்குதல்களையும் செய்யத் தொடங்கியது. இதை ஆரம்பித்த அகமது யாசின், வீல்சேரிலேயே வாழ்க்கையை நகர்த்தியவர். பார்வைக்குறைபாடும் கொண்டவர். பலமுறை இவரைக் கொல்லத் தாக்குதல் நடத்தி, கடைசியாக 2004-ம் ஆண்டு ஏவுகணை வீசி இஸ்ரேல் இவரைக் கொன்றது. அவருக்குப் பின் ஹமாஸ் தலைவரான அப்துல் அஜிஸ் என்பவரும் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து காலித் மாஷல் என்பவர் தலைவராக இருந்த காலத்தில்தான் பாலஸ்தீனத் தேர்தல்களில் ஹமாஸ் வென்றது. இஸ்மாயில் ஹனியே என்பவர் பிரதமராகப் பதவியேற்றார்.
யாசர் அராபத் உருவாக்கிய பாலஸ்தீன விடுதலை இயக்கமும், அதன் அரசியல் அமைப்பான ஃபதா கட்சியும், ‘இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரண்டு நாடுகள் இணைந்திருக்க வேண்டும்’ என்ற கொள்கையை ஏற்றவை. ஆனால், ஹமாஸ் இதற்கு நேர்மாறாக இஸ்ரேல் என்ற நாடு இருப்பதையே ஏற்கவில்லை. யூதக் குடியிருப்புகளைக் கடுமையாக எதிர்த்தது. ஒரு கட்டத்தில் இஸ்ரேல் அரசுக்கும் ஹமாஸ் நிர்வாகத்துக்கும் நேரடி மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக காஸா முனையில் இருந்த யூதக் குடியிருப்புகளை அகற்றியது இஸ்ரேல். மேற்குக்கரையில் இருக்கும் பாலஸ்தீன அரசுக்கு எல்லா வகைகளிலும் உதவிய இஸ்ரேல், காஸாவைக் கைகழுவியது.
கடந்த 2007 முதல் காஸாவை ஆள்கிறது ஹமாஸ். அந்தப் பகுதி இப்போது இஸ்ரேலின் நிரந்தர முற்றுகையில் இருக்கிறது. காஸாவிலிருந்து வெளியேற மூன்று வழிகள் உள்ளன. இவற்றில் ரஃபா எல்லை என்பது எகிப்து நாட்டை ஒட்டியுள்ளது. இதுதவிர இஸ்ரேல் பக்கம் இரண்டு வழிகள் உள்ளன. எல்லாமே நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. காஸாவின் எட்டு அகதிகள் முகாம்களில் மட்டுமே ஆறு லட்சம் பாலஸ்தீனர்கள் வசிக்கின்றனர். ஐ.நா இவர்களுக்கான உதவிகளைச் செய்கிறது. தண்ணீர், மருந்து, உணவு என்று எல்லாவற்றுக்குமே தட்டுப்பாடு. வறுமையும் வேலையின்மையுமே நிரந்தர வாய்ப்புகள் எனும்போது, எவரும் சட்டெனத் தடம் மாறுவது நடக்கிறது.
ஹமாஸ் அமைப்புக்கு கத்தார், எகிப்து என்று பல நாடுகளில் அலுவலகம் இருந்தாலும், ஈரான் போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும், அதைத் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தி முடக்கி வைப்பது இஸ்ரேலுக்கு சுலபமாக இருந்தது. இதற்கிடையில் பல்வேறு அரபு நாடுகளுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ள இஸ்ரேல் முற்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமீபத்தில் இப்படி இஸ்ரேலுடன் நட்பு பாராட்டியது. அடுத்து சவூதி அரேபியாவும் இதே வழியில் வந்தபோதுதான் ஹமாஸ் கிளர்ந்தெழுந்தது.
சின்னச் சின்னதாக ஹமாஸ் பல தாக்குதல்களை இஸ்ரேலில் நடத்தியிருந்தாலும், அக்டோபர் 7-ம் தேதி நடத்தியது கொடூரமான தாக்குதல். ஹிட்லரின் ஜெர்மனியில் நாஜிக்கள் நடத்திய தாக்குதலுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுஞ்செயல் அது. காஸா எல்லை தாண்டி ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள், யூதக் குடியிருப்புகளைச் சுற்றி வளைத்தனர். பல மணி நேரம் வீடுவீடாகத் தேடுதல் வேட்டை செய்து தாக்குதல் நடத்தினர். குழந்தைகளின் கண்ணெதிரே கொல்லப்பட்ட பெற்றோர்கள், இளைஞர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு அவர்களின் பெற்றோரைக் கொன்றது, சில இடங்களில் குழந்தைகள் மற்றும் மூதாட்டிகளைக்கூட விட்டுவைக்காதது என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர் ஹமாஸ் தீவிரவாதிகள். 150 பேரைப் பணயக்கைதிகளாகப் பிடித்துக்கொண்டு காஸா திரும்பினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவிகள்.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் முழக்கம் செய்தது. ‘காஸாவில் இருக்கும் பொதுமக்கள் எல்லோரும் 24 மணி நேரத்துக்குள் தெற்குக் காஸாவை அடைய வேண்டும். வடக்குக் காஸாவில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்கப்போகிறோம்’ என்றது. ஆனால், அதற்கு முன்பாகவே காஸா முழுக்க பாஸ்பரஸ் குண்டுகள் உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது இஸ்ரேல்.
ஈவு இரக்கமின்றி அப்பாவிகளை ஹமாஸ் கொன்றதற்கு பதிலடித் தாக்குதலில் காஸாவில் இருக்கும் அப்பாவிகள்தான் பலிகடா ஆகிறார்கள். போர் எப்போதும் எளிய மக்களின் ரத்தத்தையும் உயிரையுமே காவு வாங்கும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் ஆகியிருக்கிறது பாலஸ்தீனம். ‘காஸாவைத் தாக்கினாலும், அந்த நிலத்தை ஆக்கிரமிக்கக்கூடாது. தீவிரவாதிகளை அழித்துவிட்டு வந்துவிட வேண்டும்’ என்று மென்மையாக இஸ்ரேலைத் தட்டிக்கொடுக்கிறது அமெரிக்கா.
ஹமாஸ் முக்கியத் தலைவர்கள் பலரும் கத்தார் நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத், அவர்களைக் கண்காணித்துவருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தைத் தாண்டி எங்கெங்கோ ரத்தம் சிந்த இருக்கும் ஒரு முடிவில்லா யுத்தமாக இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் மாறக்கூடும்.
– அகஸ்டஸ்