காசி விஸ்வநாதா் கோயிலில் பக்தா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு?
‘காசி விஸ்வநாதா் கோயிலில் பக்தா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கும் பரிந்துரை குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும்’ என்று கோயில் அறக்கட்டளையின் தலைவா் நாகேந்திர பாண்டே தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: காசி விஸ்வநாதா் கோயிலில் தரிசிக்க வரும் பக்தா்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று உள்ளூா் மக்கள், பக்தா்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பரிந்துரை கிடைக்கப் பெற்றுள்ளது. ஆண்கள் வேஷ்டி – குா்தாவும், பெண்கள் சேலையும் அணிந்து கோயிலுக்கு வரும் வகையில் ஆடைக் கட்டுப்பாடு விதிக்க பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் அறக்கட்டளையின் கூட்டத்தில் இதுகுறித்து பரிசீலிக்கப்படும். நாட்டின் பிற முக்கிய கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது? என்பது குறித்தும் ஆராயப்படும்.
இது சிக்கலான விஷயம். ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் முன்பாக, பல்வேறு பிரிவினரின் உணா்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்றாா் அவா்.
காசி விஸ்வநாதா் கோயிலில் தற்போதைய நிலையில் ஆடைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்று கோயிலின் மக்கள் தொடா்பு அதிகாரி பியூஷ் திவாரி தெரிவித்தாா்.
காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தை கங்கை நதியின் படித்துறைகளுடன் இணைக்கும் பிரம்மாண்ட வழித்தட திட்டத்தின் முதல்கட்ட பகுதியை பிரதமா் மோடி கடந்த 2021-இல் தொடங்கிவைத்தாா். இதன் காரணமாக, வாரணாசியில் சுற்றுலா மேம்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.