20 கோடி இல்ல 200 கோடி வேண்டும்…அடுத்தடுத்து மிரட்டல்..அம்பானியை மிரட்டுபவர்கள் யார்??
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் கடிதம் விடுத்தவரின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்திய அளவில் மிக பெரிய கோடீஸ்வரர் என்றால் அனைவரும் குறிப்பிடுவது முகேஷ் அம்பானியை தான். தொழில்துறை, சினிமா, விளையாட்டு என நாட்டின் பல்வேறு துறைகளில் பெரும் தடத்தை பதித்துள்ள முகேஷ் அம்பானியின் தற்போதைய சொத்து மதிப்பு $92 பில்லியன் என கூறப்படுகிறது.
உலக பணக்காரர்கள் வரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் இவர், மும்பையில் தனது குடும்பத்துடன் ஆடம்பர பங்களாவில் வசித்து வருகின்றார். இவருக்கு அண்மையில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ள இந்த கொலை மிரட்டலில், “எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால் உன்னை கொன்று விடுவோம். இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மெயில் வந்த பிறகு, ஆண்டிலியா எனப்படும் முகேஷ் அம்பானியின் இல்ல பாதுகாவலர்கள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த விசாரணையில் இந்த மெயில் கடந்த 27-ஆம் தேதி ஷதாப் கான் என்பவரால் அனுப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் இந்த 20 கோடி ரூபாய் மட்டுமே கேட்டு மிரட்டல் வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது. முதலில் அனுப்பப்பட்ட மெயிலிற்கு பதில் ஏதும் வராத காரணத்தால், இரண்டாவது தொகை அதிகரிக்கப்பட்டு 200 கோடி ரூபாய் தொகை கேட்டு மிரட்டல் மெயில் வந்துள்ளது என செய்திகள் வெளிவந்துள்ளன.
அந்த மெயிலில் “எங்கள் மின்னஞ்சலுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இப்போது ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் மரணம் நிச்சயம்” இதனை தொடர்ந்து மும்பை காம்தேவி போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், அடையாளம் தெரியாத நபர் மீது ஐபிசி பிரிவு 387 மற்றும் 506 (2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த் ஷதாப் கான் குறித்து தீவிர தேடுதல் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அம்பானி குடும்பத்தினருக்கு இது போன்று கொலை மிரட்டல்கள் வருவது இதுவே முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்தாண்டு பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.