யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியராக கலாநிதி விஜயகுமாரன் பதவி உயர்வு!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இதற்கான ஒப்புதலைப் பல்கலைக்கழகப் பேரவை வழங்கியது.
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் (28) சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த கலாநிதி ஆர். விஜயகுமாரனின்
விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த மூதவையால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கை, நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அவற்றின் அடிப்படையில், பணியாளர் திறன் விருத்தி மையத்தின் பணிப்பாளரும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் நிதி முகாமைத்தவத் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆர். விஜயகுமாரன் நிதி முகாமைத்தவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.