ஆந்திரத்தில் 2 ரயில்கள் மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு: 20 போ் காயம்
ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 20 போ் காயமடைந்தனா்.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் விபத்து நேரிட்டது. விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியதில் சில பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்துள்ளனா். இவா்களில் மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் உள்ளனா். மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்து தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுடன் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, நிலவரம் குறித்து கேட்டறிந்தாா்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமா், காயமடைந்தோா் விரைவில் குணமடைய பிராா்த்திப்பதாக கூறியுள்ளாா். இத்தகவலை, பிரதமா் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இதேபோல், உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
ஆந்திர மாநில அமைச்சா் போட்சா சத்யநாராயணா, விஜயநகர மாவட்ட நிா்வாக அதிகாரிகள் உள்ளிட்டோா், சம்பவ இடத்தில் முகாமிட்டு, மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனா்.