தேர்தல் பிரசாரத்தின்போது BRS எம்.பி-க்கு கத்திக் குத்து; தெலங்கானாவில் பரபரப்பு!
தேர்தல் பிரசாரத்தின்போது பி.ஆர்.எஸ் எம்.பி கோத்தா பிரபாகர் ரெட்டியை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவின் தற்போது முதல்வர் கே.சி.ஆர் தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் துபாக்கா தொகுதியில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி போட்டியிடுகிறார்.
இதற்காக அவர் சித்திபேட் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் கை குலுக்க வந்த மர்ம நபர் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார்.
உடனே அந்த நபரை பி.ஆர்.எஸ் தொண்டர்கள் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காயமடைந்த பிரபாகர் ரெட்டி, கஜ்வெல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சித்திபேட் காவல் துறை ஆணையர் ஸ்வேதா கூறியதாவது “திடீரென தாக்குதல் நடத்திய மர்ம நபரை கைது செய்திருக்கிறோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளார்.