வங்கிக்குள் புகுந்த வெள்ள நீர்… வீணான ரூ.400 கோடி பணத்தாள்கள்…!
மகராஷ்ட்ரா மாநிலத்தின் நாக்பூரில் உள்ள நாக் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அங்குள்ள வீடுகள் மூழ்கியதோடு மட்டுமில்லாமல் சீதாபுல்தியில் உள்ள பேங்க் ஆஃப் மகராஷ்ட்ராவின் மண்டல அலுவலகமும் நீரில் மூழ்கியுள்ளது. மேலும் வங்கியிலிருந்த பணப்பெட்டகமும் நீரில் மூழ்கியதால், அதிலிருந்த கோடிக்கணக்கான ரூபாய்கள் நனைந்து, கிழிந்து சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் எதுவும் கூற மறுத்தாலும் குறைந்தபட்சம் ரூ.400 கோடி மதிப்புள்ள ரூபாய் தாள்கள் சேதமாகியிருக்கலாம் என கருதப்படுகிறது. வங்கியின் பணப் பெட்டகத்திற்குள் நுழைந்த வெள்ள நீரை முழுதும் வெளியேற்ற 24 மணி நேரங்களுக்கும் மேல் ஆகியுள்ளது. நாக் ஆற்றிலிருந்து வெறும் 50மீ தொலைவில் உள்ள இந்த வங்கி, 1967-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் வசந்த்ராவ் நாயக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வங்கியின் பணப் பெட்டகத்திற்குள் வெள்ள நீர் அடித்துச் செல்வதையும் உதவிக்கு யாருமின்றி வங்கியின் காவலாளிகள் செயவதறியாமல் திகைப்புடன் நிற்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வங்கியில் இருந்த ரூபாய் நோட்டுகளே சேதமடைந்துள்ளதாகவும் இதனால் பணத்தின் மதிப்பிற்கு எந்த இழப்பும் இல்லையென்றும், பேங்க் ஆஃப் மகராஷ்ட்ராவின் பேலன்ஸ் ஷீட் அப்படியே தான் உள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளம் காரணமாக வங்கி மூழ்கியது குறித்த அறிக்கை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்படுள்ளது. இதுதொடர்பாக சேதமடைந்த ரூபாய் தாள்களை கவனமாக எடுத்துச் செல்லவும் பணப் பெட்டகத்தை மீண்டும் நிரப்பவும் ஆய்வுக் குழு வருகை தந்துள்ளது. அவர்கள் சேதமடைந்துள்ள ரூபாய்களை மதிப்பிட்டு, அதை ஸ்கேன் செய்து, மீண்டும் வெளியிட முடியாத பணத்தாள்களை அழித்து புதிதாக பணத்தை வங்கிக்கு வழங்குவார்கள். வங்கி இருப்பில் ஏதாவது பற்றாக்குறை இருந்தால், அதை வங்கியே திருப்பி செலுத்த வேண்டும். இதற்கிடையில் பணப்பெட்டகத்திற்குள் வெள்ள நீர் எப்படி புகுந்தது என்பது குறித்து தனியாக பேங்க் ஆஃப் மகராஷ்ட்ரா விசாரணையை தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ரூபாய் வெளியிடும் போதும் அதற்கு ஈடான மதிப்புள்ள தங்கத்தையோ பத்திரத்தையோ அரசாங்கம் வைத்திருக்கும். கடந்த அறுபது ஆண்டுகளில் வெள்ளத்தில் வங்கி ஒன்று மூழ்கியது இதுவே முதல்முறை. வெள்ளத்தால் வங்கியின் அன்றாட செயல்பாடுகளில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை. இனி எதிர்காலத்தில் வெள்ள நீர் வங்கிக்குள் புகாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வங்கி அதிகாரி கூறியுள்ளார்.
ஒரு வங்கியானது ரிசர்வ் வங்கியின் சார்பாக மட்டுமே பணத்தை தன்னிடம் வைத்திருக்கிறது. ஒருவேளை அதனிடமுள்ள பணத்தாள்கள் சேதமடைந்தால், இவற்றை எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். இதனால் புதிதாக வெளியிடப்படும் பணத்தாள்களால் பொருளாதாரத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படாது; அப்படியேதான் இருக்கும் என பொதுத்துறை வங்கியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.