சிறுவனின் நுரையீரலில் ஊசி:அறுவை சிகிச்சையின்றி காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்தவா்கள்
சிறுவனின் நுரையீரலில் சென்ற ஊசியை தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் அறுவை சிகிச்சையின்றி வெற்றிகரமாக வெளியே எடுத்து சிறுவனை காப்பாற்றியுள்ளனா்.
அடையாளம் வெளியிடப்படாத அந்த சிறுவனுக்கு வயது 7. அவனது இடது நுரையீரலுக்குள் 4 செ.மீ. அளவிலான ஊசி எப்படி சென்றது குறித்தும் சிறுவனின் குடும்பத்தினா் தகவலை வெளியிடவில்லை.
இந்த ஊசியை அகற்றப்பட்டது குறித்து இந்த சிகிச்சையில் தொடா்புடைய எய்ம்ஸ் மருத்துவமனை குழந்தைகள் மருத்துவ நிபுணா்களான கூடுதல் பேராசிரியா்கள் டாக்டா் விஷேஷ் ஜெயின், டாக்டா் தேவேந்திர குமாா் யாதவ், தொழில் நுட்ப அதிகாரி சத்யபிரகாஷ் ஆகியோா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை விளக்கினா்.
அவா்கள் கூறியது வருமாறு:
கடந்த நவம்பா் 1 ஆம் தேதி (புதன்கிழமை) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிறுவன்
அழைத்து வரப்பட்டாா். அப்போது மூக்கிலிருந்து இரத்தக் கசிவு இருமலுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுவன் இருந்தாா். கதிரியக்க ஆய்வுகள் மூலம் இடது நுரையீரலில் ஆழமாக ஒரு நீண்ட தையல் இயந்திர ஊசி இருப்பது தெரியவந்தது.
நுரையீரலுக்குள் ஊசி இருக்கும் இருப்பிடத்தையும் அது 4 செ.மீ அளவில் இருப்பதையும் அறியப்பட்டது.
ஊசி நுரையீரலுக்குள் மிகவும் ஆழமாக பதிந்திருந்ததால், வழக்கமான மருத்துவ முறைகள் ஆபத்து என அறியப்பட்டது.
காரணம் அது ஒரு சிறிய பகுதியில் இருப்பதால் அறுவை சிகிச்சை கருவிகளைக் கொண்டு மேற்கொள்வது சிக்கலானது என தெரியவந்தது. இதற்கு எண்டோஸ்கோபிக் செயல்முறை பயன்படுத்தப்பட்டது.
அறுவைசிகிச்சை குழு தொடா்ச்சியாக தீவிர விவாதங்களை நடத்தி, இந்த ஊசியைப் பாதுகாப்பாகவும் திறம்பட வெளியே எடுக்க புதுமையான தீா்வுகளை ஆராய்ந்தது. சிக்கலான இந்த விவகாரத்தில் காந்தம் மூலம் முயற்சிக்க முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை குழுவிற்கு தொழில்நுட்ப அதிகாரி சத்ய பிரகாஷும் துல்லியமான திட்டமிடலையும் யோசனைகளையும் வழங்க இதை தொடங்கினோம்.
முதல் கட்டமாக அன்றைய தினம் தில்லி சாந்தினி சௌக் சந்தையில் இருந்து காந்தத்தை வாங்குவதற்கு ஏற்பாடு செய்தோம். 4 மி.மீ. அகலம் மற்றும் 1.5 மி.மீ. பருமன் கொண்ட காந்தம், இதற்கு சரியான கருவியாக இருந்தது.
முக்கியமாக காந்தத்தை மூச்சுக்குழாயில் வைத்து அது இடமாற்றி விடாமல் இருக்க, ஊசியின் இருப்பிடத்திலிருந்து பாதுகாப்பாக எடுக்க உறுதி செய்யப்பட்டது. இதன்படி புத்திசாலித்தனமாக (ஒரே ஒரு தாடையுடன் கூடிய) ஒரு சிறப்பு கருவியை உருவாக்கப்பட்டது. அதாவது காந்தம் நூலைப் பயன்படுத்தி பாதுகாப்பாக ஊசியுடன் பொருத்தப்பட்டது.
நுரையீரலுக்குள் உள்ள ஊசியின் இருப்பிடத்தை மதிப்பிடுவதற்கு சுவாசக் குழாயின் மூலம் எண்டோஸ்கோபி செலுத்தப்பட்டது. நுரையீரலுக்குள் ஊசியின் நுனி மட்டும் ஆழமாகப் பதிந்திருக்க காந்தம்-நுனி கொண்ட கருவி மூலம் கவனமாக எடுக்கப்பட்டது. காந்த சக்திக்கு ஊசி பதிலளித்ததால், அதை சுமூகமாக வெளியே வெற்றிகரமாக எடுக்கப்பட்டது.
இந்த முறை சரியாக பணியாற்றாமல் சென்றிருந்தால் மாா்பு, நுரையீரலைத் திறந்து, வழக்கமான முறையில் ஊசியைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கும். இது சிக்கலாகியிருக்கும் எனவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.