ஜடேஜா சுழலில் தவிடுபொடியான தென்னாப்பிரிக்கா.. இந்திய அணி சாதனை வெற்றி.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகளான இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் ஆடிய ஆட்டம் கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தது.
நிதானமாக ஆடிய விராட் கோலி 101 ரன்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 77 ரன்களையும் விளாசினர். இதன்பின் 327 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி வெறும் 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், முகமது ஷமி, குல்தீப் யாதவ் இருவரும் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதனால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்பின் ரோகித் சர்மா பேசும் போது, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு ஆங்கர் ரோல் கொடுத்தோம். கடைசி வரை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். அதுதான் அவரின் நிதான ஆட்டத்திற்கு காரணம். அதன் மூலமாக தான் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தால், நிச்சயம் ஆடுகளத்தின் உதவியை பெற முடியும் என்று நம்பிக்கை வந்தது. ஸ்ரேயாஸ் ஐயரை பொறுத்தவரை கடந்த சில போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும், பிளேயிங் லெவனில் இருந்திருப்பார்.
அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்றாகும். அது ஏதோ ஒரு நாளில் மாறிவிடாது. கடந்த 2 போட்டிகளிலும் ஸ்ரேயஸ் ஐயர் தனது திறமையை நிரூபித்துவிட்டார். நானும் சுப்மன் கில்லும் சூழலுக்கு ஏற்றபடி விளையாடுவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். எந்தவொரு ஃபார்மட் என்றாலும் ஜடேஜா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இன்றைய ஆட்டம் அவரது கிளாசிக் போட்டிகளில் ஒன்றாகும். டெத் ஓவர்களில் ரன்களையும், பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளையிம் வீழ்த்தி மிரட்டினார். அவர் மீதான எதிர்பார்ப்பும், அவரின் பணியும் என்னவென்று அவருக்கு நன்றாக தெரியும். அதேபோல் இன்றைய வெற்றியால் ரொம்ப கொண்டாடவோ, மகிழ்ச்சியடையவோ தேவையில்லை. ஏனென்றால் அடுத்ததாக 2 முக்கிய போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஆனாலும் எங்களில் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.