10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
ஆள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக 10 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அசாம், ஹரியாணா, ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய 10 மாநிலங்களில் ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மாநில காவல்துறைகளுடனான ஒருங்கிணைப்புடன் மனித கடத்தல் வழக்குகளுடன் தொடர்புடைய மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் குடியிருப்பு வளாகங்கள் மற்றும் பிற இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.
குற்றவாளிகள் குறித்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்தே மேற்கண்ட பத்து மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
சர்வதேச தொடர்புகளைக் கொண்ட மனித கடத்தல்காரர்களின் மோசடியை வெளிக்கொண்டு வருவதற்காக, நான்கு டஜன் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறினர்.
இலங்கையில் மனித கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை பெங்களூருவை சேர்ந்த என்ஐஏ குழு கடந்த மாதம் தமிழகத்தில் கைது செய்தது. குற்றம் சாட்டப்பட்ட, இம்ரான் கான் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து, பெங்களூரு மற்றும் மங்களூருவில் பல்வேறு இடங்களுக்கு இலங்கை பிரஜைகளை கடத்தியதாக கூறப்படுகிறது.
மனித கடத்தல் வழக்குகளின் சர்வதேச தொடர்புகளைக் கருத்தில் கொண்டு உள்ளூர் காவல்துறையிடம் இருந்து வழக்கை தேசிய புலனாய்வு முகமை எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 இந்தியர்களான தினகரன், காசி விஸ்வநாதன், ரசூல், உசேன் மற்றும் அப்துல் முஹீது ஆகியோருக்கு எதிராக 2021 அக்டோபரில் என்ஐஏ முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2023 அக்டோபரில் இந்த வழக்குகளில் தொடர்புடைய 13 பேர் என்.ஐ.ஏ.வால் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதேபோல், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகவும், சட்டப்பூர்வ ஆவணங்கள் வாங்கித் தருவதாகவும் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி அப்பாவி மக்களை கடத்தல்காரர்கள் ஏமாற்றிய வழக்குகள் தொடர்பாகவும் தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகின்றது.