ஹரியாணா: கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் பலி!
ஹரியாணாவின் யமுனா நகரில் கள்ளச்சாராயம் அருந்திய ஆறு பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பேசிய யமுனா நகர் காவல்துறை கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா, “யமுனா நகர் பகுதியில் மது அருந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாக புதன்கிழமை பிற்பகலில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று மருத்துவர்கள் மற்றும் உயிரிழந்த இளைஞர்களின் உறவினர்களிடம் விசாரித்தோம்.
அதைத் தொடர்ந்து அதே பகுதியில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்டபோது உயிரிழந்த 6 பேரும் கள்ளச்சாராயம் அருந்தியது தெரியவந்தது.
கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிகள் சிலர் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக பல இடங்களில் சோதனைகள் நடத்தி, தடயங்களை சேகரித்து வருகிறோம்.” என்று தெரிவித்தார்.
இதில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக 302, 308, 120-பி ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“ஆறு பேரும் மது அருந்திய பின்புதான் இறந்துள்ளனர். அவர்கள் எங்கு சென்று அதனை வாங்கினர் என்பது தெரியவில்லை. இதனை விற்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஹரியாணாவில் கள்ளச்சாராய விற்பனை தடுத்து நிறுத்தப்படவேண்டும்” என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஹரியாணா மாநிலத்தில் மனோகர் லால் கட்டா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.