இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற யாழ். குற்றவாளி இலங்கையிடம் ஒப்படைப்பு!
யாழ்ப்பாணத்தில் பல குற்றச்செயல்கள் மற்றும் போதைப் பொருள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தின் 11 பிடியாணைகளைப் பெற்ற ஒருவர் அகதி போல் நடித்து இந்திய மீன்பிடி படகின் உதவியுடன் இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற போது , அவரை தனுஷ்கோடி பொலிஸார் நேற்று (11) கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இவர் இந்திய மீனவர் ஒருவருக்கு 75’000 ரூபாவைக் கொடுத்து படகில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல முற்பட்ட போதே , அவரையும் அழைத்துச் சென்ற இந்தியரையும் படகுடன் போலீசார் கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடி கடலோர காவல்படை நடத்திய விசாரணையில், போலீசாரிடம், வடக்கில் வசிக்க முடியாததால், அகதியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக தெரிவித்த போதும் , தொடர் விசாரணையில் அவர் கூறிய விவரங்கள் முரண்பட்டதால் தனுஷ்கோடி போலீசில் ஒப்படைக்கப்பட்ட அவர் , இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.