‘வெறும் 6 பேருக்காக விமானத்தை இயக்க முடியாது’ – பயணிகளை இறக்கிவிட்ட இண்டிகோ!

பெங்களுருவில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் வெறும் 6 பயணிகள் மட்டுமே இருந்ததால் அவர்கள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

அமிர்தசரஸிலிருந்து சென்னை செல்லும் இண்டிகோ 6E478 விமானம் ஞாயிற்றுக்கிழமை( நவ. 19) இரவு 9.30 மணிக்கு பெங்களூரு வந்தடைந்தது. அங்கு பெரும்பாலான பயணிகள் இறங்கியுள்ளனர். அங்கிருந்து சென்னைக்கு வெறும் 6 பயணிகள் மட்டுமே விமானத்தில் இருந்துள்ளனர்.

இதையடுத்து 6 பேர் மட்டுமே இருப்பதால் வேறு விமானத்தில் ஏற்றி விடுகிறோம் என்று கூறி பயணிகளை இறங்கச் சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி பயணிகளும் இறங்கியுள்ளனர்.

ஆனால், அந்த நேரத்தில் சென்னைக்கு வேறு விமானம் இல்லை என்று கூறி விமான நிலையத்திலேயே தங்க வைத்துள்ளனர். அதன்பின்னர் திங்கள்கிழமை காலைதான் அந்த 6 பயணிகளும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 6 பயணிகளில் 2 பேர் முதியவர்கள். இரவு தங்குவதற்கு அறை உள்ளிட்ட எந்த வசதிகளும் விமான நிறுவனம் செய்து தரவில்லை என்று பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அதில் இருவர் மட்டும், விமான நிலையத்திற்கு 13 கிமீ தொலைவில் உள்ள ஒரு ஹோட்டலில் அன்று இரவு தங்கியுள்ளனர், மற்றவர்கள் விமான நிலையத்திலேயே இருந்துள்ளனர்.

ஒருநாள் தாமதமாக சென்னை வந்தததற்கும் அன்று இரவு ஏற்பட்ட அசௌகரியத்திற்கும் விமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.